Friday, April 10, 2015

On Friday, April 10, 2015 by Unknown in ,    
செலவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தொழில் நிறுவனங்களில் லாபம் அதிகரிக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் கே.வி.மகிதர் பேசினார்.
 இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில், "தொழில் நிறுவனங்களில் செலவுகளை குறைப்பது எப்படி?' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு திருப்பூர், ஸ்ரீபுரம் அறக்கட்டளை அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு, இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்டத் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார்.
இதில், தொழில்நுட்ப ஆலோசகர் கே.வி.மகிதர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது:
 தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உற்பத்திச் செலவுகள் குறித்த தகவல்கள் தெளிவாகத் தெரிய வேண்டும். தாங்கள் பயன்படுத்தும் அலுவலகப் பொருள்கள், தொழிற்சாலையில் உள்ள கருவிகள் குறித்த தகவல்களும், அவற்றின் மதிப்பும் தெரிந்திருக்க வேண்டும்.
வீணாக எரியும் மின் விளக்குகள், ஆள்கள் இல்லாத அறையில் சுழலும் மின்விசிறிகளை தவிர்க்கும் முறைகளை அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது என்பது கலாசாரம் என்ற விஷயத்தை அவர்களுக்கு விளக்க வேண்டும். லாபம் குறைகிறதே என்கிற கவலை வரும்போது தான் செலவுகள் குறித்த அக்கறை பிறக்கிறது. இந்தச் சூழ்நிலையை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும்.
 விற்பனை, லாபம் குறித்த தகவல்களை நிர்வாகக் குழுவுக்கு தெரிவித்தால் போதும். ஆனால் உற்பத்திச் செலவுகள் குறித்த முழு விவரங்களும் அடிப்படைத் தொழிலாளர்கள் வரை தெரிந்திருக்க வேண்டும். செலவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தொழில் நிறுவனங்களில் லாபம் அதிகரிக்கும் என்றார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில், திருப்பூர் பின்னலாடைத் தொழில் துறையினர் ஏராளமானோர் பங்கேற்றனர்

0 comments: