Monday, November 23, 2015

On Monday, November 23, 2015 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று இரவு 11.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது.
அதிகபட்சமாக காயல்பட்டிணத்தில் 75 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் பெய்த கனமழையால் அண்ணா நகர் மெயின்ரோட்டில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீர் அப்பகுதியில் உள்ள அரசு அலுவலர் குடியிருப்பில் புகுந்தது. இதனால் அங்குள்ள 66 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
மேலும் இடி, மின்னலுடன் மழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள 3 பழமையான மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. சூறாவளி காற்று வீசியதால் அரசு அலுவலர் குடியிருப்பில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சில்வர்புரம் பகுதியில் உள்ள 2 வீடுகள் இடிந்து விழுந்தது. வி.எம்.எஸ். நகர், அமுதா நகர், அண்ணா நகர் மேற்கு பகுதி, லூர்துபுரம், திரேஸ்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள 40–க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சிரமமடைந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை மேயர் அந்தோணி கிரேஸ், இளைஞரணி கவியரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரை மாநகராட்சி லாரிகள் மூலம் உறிஞ்சி வெளியேற்றும் பணியை முடுக்கிவிட்டனர்.
இதேபோல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்பு பணிகளை சி.த.செல்லப்பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
பலத்த மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை நிரம்பி அதிலிருந்து உபரியாக வெளியேறும் 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலுக்குள் வீணாக செல்கிறது.
ஏரலில் குரும்பூர் செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தரைமட்ட தாம்போதி பாலம் உள்ளது. மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம் இந்த தரைமட்ட பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்வது வழக்கம்.
தற்போது ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து உபரிநீர் அதிகமாக வெளியேறுவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை ஏரலில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தால் மூழ்கியது. இன்று அங்கு தண்ணீர் அதிகமாக சென்றதால் தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஓட்டப்பிடாரம் பகுதியில் பெய்த கனமழையால் 20–க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை புதிய தமிழகம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான டாக்டர். கிருஷ்ணசாமி பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 509 குடிசைவீடுகள் இடிந்துள்ளன. மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம் (மில்லிமீட்டரில்) வருமாறு:–
திருச்செந்தூர்– 43.7, தூத்துக்குடி– 32, கீழஅரசரடி– 12.2.
கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் தலா 1 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது

0 comments: