Saturday, January 09, 2016

On Saturday, January 09, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டி செமப்புதூரை சேர்ந்தவர் சுப்பையா (வயது 45) கொத்தனார். இவருடைய மனைவி பரமேசுவரி (32). இவர்களுக்கு அஜித் (10), கலைச்செல்வம் (9), முனிய சாமி (7) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
சுப்பையாவுக்கு குடிப் பழக்கம் இருந்து வந்தது. இதனால் மது குடித்து விட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தார். வீட்டில் செலவுக்கு சரிவர பணம் கொடுக்காமல் இருந்து வந்தார். கடந்த 8.3.14 அன்று இரவு சுப்பையா மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். அங்கு சாப்பிடும் போது, செலவுக்கு பணம் கொடுக்காமல் குடித்துவிட்டு வருவதை பரமேசுவரி கண்டித்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த சுப்பையா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை பரமேஸ்வரி மீது ஊற்றி தீவைத்து கொளுத்தி விட்டார். இதில் உடல் கருகிய நிலையில் பரமேஸ்வரி சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புளோரா குற்றம் சாட்டப்பட்ட சுப்பையாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
அப்போது, தண்டனை விதிக்கப்பட்ட சுப்பையா நான் ஜெயிலுக்கு போனால் எனது 3 குழந்தைகளும் அனாதையாகி விடும் என்று கூறி நீதிபதியிடம் கண்ணீர் விட்டு கதறினார். இதையடுத்து 3 சிறுவர்களையும், குழந்தைகள் நலக்குழு மூலம் படிக்க வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments: