Saturday, August 23, 2014

On Saturday, August 23, 2014 by TAMIL NEWS TV in ,    



ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்பகுதிகளான ஆசனூர், தாளவாடி ஆகிய பகுதிகளில் இடி– மின்னலுடன் பலத்த மழை கொட்டி வருகிறது.
இந்த பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 6 மணிக்கு தூறலுடன் தொடங்கிய மழை போக போக பலத்த மழையாக மாறியது. இந்த மழையால் அப்பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இப்பகுதி கர்நாடக மாநில வனப்பகுதியையொட்டி உள்ளதால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
தாளவாடியை அடுத்த மெட்டல்வாடி மல்லன்குழி பகுதியை சேர்ந்தவர்கள் பால்ராஜ் (வயது 40), சந்திரன் (42) இருவரும் தொழிலாளர்கள். உறவினர்கள்.
இவர்கள் 2 பேரும் நேற்று இரவு ஒரு மொபட்டில் பிஜில் வாடி என்ற ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தனர். இரவு 9.45 மணியளவில் மல்லன்குழி பக்கத்தில் உள்ள தாழ்வான ரோட்டில் காட்டாற்று வெள்ளம் சீறி பாய்ந்து சென்று கொண்டிருந்தது.
ரோட்டோரம் ஏராளமான பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர். அந்த வழியாக வாகனங்களில் வருபவர்களை ‘‘யாரும் செல்ல வேண்டாம், வெள்ளம் இழுத்து கொண்டு போய்விடும்’’ என எச்சரித்து கொண்டே இருந்தனர்.
அப்போது அங்கு மொபட்டில் வந்த பால்ராஜ் மற்றும் சந்திரனையும் பொதுமக்கள் எச்சரித்தார்கள். வெள்ளம் அதிகமாக போகிறது, போகாதீர்கள்... என்று கூறினர்.
அதற்கு அவர்கள்‘‘ நாங்கள் எப்படியும் போயே ஆக வேண்டும்’’ என்று கூறி வெள்ளம் சென்ற ரோட்டில் சென்றனர்.
சிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள். மொபட்டுடன் 2 பேரையும் காட்டாற்று வெள்ளம் இழுத்து அடித்து சென்றது. இதில் 2 பேரும் வெள்ளத்தில் மூழ்கி பலியாகி விட்டனர்.
வெள்ளத்தில் அவர்கள் இழுத்து செல்லப்பட்டதை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் அபாய குரலிட்டனர். ஆனால் வெள்ளம் ஆக்ரோஷமாக சென்றதால் அவர்களை பொது மக்களால் காப்பாற்ற முடியவில்லை.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆசனூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தாளவாடி போலீசாரும் வந்தனர்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பால்ராஜ் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். சந்திரன் உடல் நேற்று கிடைக்கவில்லை. நள்ளிரவு ஆகிவிட்டதால் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
இன்று (சனிக்கிழமை) 2–வது நாளாக சந்திரன் உடலை தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் தேடி வருகின்றனர்,
காட்டாற்று வெள்ளத்தில் 2 பேர் அடித்து செல்லப்பட்டு பலியான சம்பவம் தாளவாடி மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: