Saturday, August 23, 2014

On Saturday, August 23, 2014 by TAMIL NEWS TV in ,    



ஈரோடு ரெயில் நிலையத்தில், நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுபரன்சு தெரிவித்தார்.
கோட்ட மேலாளர் சோதனை
ஈரோடு ரெயில் நிலையம் அருகே ரெயில் என்ஜின் பணிமனைகள் இயங்கி வருகின்றன. எலக்ட்ரிக் லோகோ பணிமனை ஒரு புறமும், டீசல் லோகோ பணிமனை ஒருபுறமும் இயங்கி வருகிறது. இருப்பினும் ஈரோட்டில் இருந்து செல்லும் ரெயில்களில் உள்ள என்ஜின்கள் அடிக்கடி பழுதாகி வருவது தொடர்ந்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சென்ற சரக்கு ரெயில்கள் நடுவழியில் என்ஜின் பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பிற பயணிகள் ரெயில்களும் தாமதமாகி சென்றன.
இந்தநிலையில் சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுபரன்சு நேற்று ஈரோடு ரெயில் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினார்.
உத்தரவு
ஈரோடு ரெயில் நிலைய சரக்கு ரெயில் நிறுத்தும் பகுதி, ஈரோடு டீசல் என்ஜின் பணிமனைகளில் அவர் திடீர் சோதனை நடத்தி அங்கு பார்வையிட்டார். அப்போது என்ஜின்களை முழுமையாக பராமரித்து எந்த தடங்கலும் இல்லாமல் ரெயில்கள் ஓடச்செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக அவர் உயர் அதிகாரிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். பின்னர் கோட்ட ரெயில்வே மேலாளர் சுபரன்சு நிருபர்களிடம் கூறியதாவது:–
கூடுதல் பணிமனை
ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகளை பராமரிப்பது. ரெயில் என்ஜின்கள் பராமரிப்பு மற்றும் தண்ணீர் வினியோகம் ஆகியவை தடங்கலின்றி நடப்பது குறித்து ஆய்வு நடந்தது. ஈரோடு டீசல் லோகோ செட்டில் அதிக அளவில் என்ஜின்கள் பழுது பார்க்கப்பட்டு வருகின்றன. எனவே இங்கு கூடுதலாக ஒரு பணிமனை பிரிவு உருவாக்கப்படும். இதற்கான திட்டம் ரெயில்வே துறைக்கு அனுப்பப்பட்டு விரைவில் ஒப்புதல் பெறப்பட உள்ளது.
இதுபோல் ரெயில் நிலையத்துக்கான லிப்ட், நகரும் படிக்கட்டு பணிகளும் விரைவில் தொடங்கும். ரெயில்வே ஆஸ்பத்திரி கட்டிட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
ரெயில் நிற்குமா?
திருப்பதிக்கு அதிக அளவில் ரெயில்கள் உள்ளன. எனவே கோவை–திருப்பதி ரெயிலை ஈரோடு ரெயில் நிலையத்தில் நிறுத்துவது தொடர்பாக அமைச்சகம்தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுபரன்சு கூறினார். ஆய்வின் போது ரெயில்வே துறை உயர் அதிகாரிகள், பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

0 comments: