Saturday, August 23, 2014

On Saturday, August 23, 2014 by TAMIL NEWS TV in ,    




தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு தேவையான பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைகளை அதிகாரிகள் நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை நடந்து வருகிறது. அதன்படி ஈரோடு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று வேளாண் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி ரெ.சதீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் செல்வராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்தும் வந்திருந்த விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துக்கூறினார்கள்.
அதன் விவரம் வருமாறு:–
பயிர்க்கடன்
ஈரோடு மாவட்டத்தில் பெரும்பான்மை பாசன வசதி பெறும் கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்ட முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதே நேரம் பாசன காலம் முழுவதும் தண்ணீர் அளவு குறையாமல் விட வேண்டும்.
தற்போது மாவட்டத்தில் அனைத்து பாசனங்களும் விவசாயத்துக்காக திறக்கப்பட்டு இருப்பதால் விதை மற்றும் இடுபொருட்கள் தேவை அதிகரித்து இருக்கிறது. இவற்றை வேளாண்மை அதிகாரிகள் அதிக அளவில் கையிருப்பு வைக்க வேண்டும். குறிப்பாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கான பயிர்க்கடனை தேவையான அளவு வழங்க வேண்டும். கடந்த ஆண்டு கடன் பெற்று, வறட்சி காரணமாக திரும்ப செலுத்த முடியாதவர்களின் நிலுவையை காரணம் காட்டி கடன் வழங்குவதை தடுக்க கூடாது.
போலி மருந்து
ஈரோடு மாவட்டத்தில் போலி உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் நடமாட்டம் உள்ளது. சமீபத்தில் 4 இடங்களில் போலி உர பிரச்சினை ஏற்பட்டது. கடந்தவாரம் கோபியை சேர்ந்த ரமேஷ் என்ற விவசாயியின் வயலில் போலி பூச்சிக்கொல்லி மருந்தால் 2 ஏக்கர் நெற்பயிர் கருகியது. இதுபற்றி வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளரை அழைத்து கூட்டம் போட்டு அனுப்பி விடுகிறார்கள். இதுபோல் இல்லாமல் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு ரூ.20 கோடி நிலுவைத்தொகையை கடந்த ஜனவரி மாதமே வழங்குவதாக முத்தரப்பு கூட்டத்தில் உறுதி அளித்தனர். ஆனால் ஆகஸ்டு மாதம் நிறைவடைந்தும் இதுவரை பணம் வழங்கப்படவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிப்பு
மத்திய அரசு வேளாண் விளைபொருட்களுக்கு ஆதாரவிலை அறிவித்தபின்னர் மாநில அரசு விலை அறிவிக்கக்கூடாது என்ற மத்திய அரசின் சட்டம் விவசாயிகளுக்கு பாதகமாக உள்ளது. எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இதுபோல் விவசாய நிலங்களில் ஆழ்குழாய் கிணறு தோண்ட உள்ளாட்சி அனுமதி பெற வேண்டும் என்று தமிழக அரசு சட்டம் இயற்றி உள்ளது. இது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். ஒரு இடத்தில் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் இல்லை என்றால் உடனடியாக அடுத்த இடத்தில் தோண்டுவோம். ஆனால் அனுமதி பெறுவது என்றால் 2 மாத காலம் காத்திருக்க வேண்டும். எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
ஈரோடு சத்தி ரோடு 30 அடிக்கு அகலப்படுத்தப்படுவதாக தெரிகிறது. அப்படி விரிவுபடுத்தப்படும்போது மரங்களை வெட்டாமல் வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்டு பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை கூறினார்கள்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் அளித்து பேசினார்கள்.

0 comments: