Thursday, February 04, 2016

On Thursday, February 04, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டத்தையொட்டி கடந்த ஜனவரி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒருபகுதியாக இன்று சர்வதேச தரவரிசை சதுரங்க போட்டிகள் இன்று தொடங்கி (4ம் தேதி) 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதன் துவக்க நிகழ்ச்சி இன்று காலை காமராஜர் கல்வி அரங்கத்தில் நடைபெற்றது. பிடே (FIDE) எனப்படும் உலக சதுரங்க கழகம், அகில இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சதுரங்க கழகத்தின் அங்கீகாரத்துடன், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் டீகே செஸ் மையம் இணைந்து நடத்தும் சர்வதேச தரவரிசை செஸ் போட்டியில் சுமார் 300 போட்டியாளர்கள் பங்கு பெறுகிறார்கள். 

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்தும், இங்கிலாந்து நாட்டில் இருந்தும் இந்த போட்டியில் பங்கு பெறுகிறார்கள். சர்வதேச மாஸ்டர் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற ஆச. மேனுவல் ஆரோன் போட்டிகளை துவக்கி வைத்தார். காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் லாஜிஸ்டிக் பிரிவு தலைவர் ஹரிகரன் வாழ்த்துரை வழங்கினார். டீகே செஸ் மையத்தின் தலைவர் டாக்டர். வசீகரன் சிறப்புரை நிகழ்த்தினார்.

சர்வதேச நடுவர் அனந்தராமன், மற்றும் எப்ரேம் ஆகியோர் போட்டிகளுக்கான விதிமுறைகளை போட்டியாளர்களுக்கு விளக்கிக் கூறினார். வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசுத் தொகையாக ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும், 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு 64 பரிசு கோப்பைகள் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை டீகே செஸ் மையத்தின் செயலாளர் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியை கற்பகவள்ளி, பேராசிரியர்கள் சாந்தி, ரெமோனா, சுபாஷினி, தேவராஜ், ராஜேஷ், IQAC ஒருங்கிணைப்பாளர் நாராயணசாமி, அலுவலர்கள் பொன்ரத்தினம், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

0 comments: