Thursday, September 01, 2016

On Thursday, September 01, 2016 by Unknown in    

திண்டுக்கல் மாவட்ட எல்லையில் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சாலை மறியல்

பழனியை அடுத்துள்ள குதிரையாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி, திருப்பூர் மாவட்ட விவசாயிகள், திண்டுக்கல் மாவட்ட எல்லையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 இந்த அணையின் மூலம் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அத்துடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குளத்துபாளையம், மயிலாபுரம், மொரத்தூர், கொழுமம், புதுநகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 800 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் பொதுப்பணித் துறையினர் சில தனிப்பட்ட நபர்களுக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளதாகக் கூறி புதன்கிழமை உழவர் உழைப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாநில தலைவர் பொங்கலூர் மணிகண்டன் தலைமையில் திருப்பூர் மாவட்ட எல்லையான கொழுமம் சோதனைச் சாவடி அருகே மறியலில் ஈடுபட வந்தனர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். வருவாய்த் துறையினரும் அங்கு வந்திருந்தனர். ஆனால், விவசாயிகள் திடீரென அப்பகுதியில் உள்ள திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் நுழைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர் மாவட்ட எல்லையிலேயே போலீஸார் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

 சாலை மறியல் குறித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்படவே அங்கு பழனி வட்டாட்சியர் ராஜேந்திரன், பழனி தாலுகா காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

0 comments: