Wednesday, September 07, 2016

On Wednesday, September 07, 2016 by Unknown in    


மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ரூ.98 லட்சத்தில் தரைதளம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பஸ்நிலையம் கணியூர், கடத்தூர், சோழமாதேவி, நீலம்பூர், கண்ணாடிபுத்தூர் உள்ளிட்ட கிராமங்களை நகரங்களோடு இணைக்கும் முக்கிய சந்திப்பாக அமைந்துள்ளது. மடத்துக்குளம் பஸ்நிலையம், உடுமலை, பழனி, பொள்ளாச்சி உள்ளிட்ட வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மடத்துக்குளம் பஸ்நிலையத்திலிருந்து பஸ் ஏறிச்செல்கின்றனர்.மேலும் பஸ்நிலையத்தை ஒட்டியே ரெயில் நிலையம் அமைந்துள்ளதால் அதிக அளவிலான மக்களால் தினசரி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பஸ்நிலையத்தில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணிகள் ரூ.98 லட்சம் செலவில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்கென முதலில் இருந்த காங்கிரீட் தளம் பெயர்த்தெடுக்கப்பட்டு புதிய “பேவர் பிளாக் கற்கள்“ பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.பணிகள் தொய்வு

பணி தொடங்கி சுமார் 2 மாதம் ஆன நிலையிலும் பாதியளவு கூட பணி நிறைவு பெறவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஒரு சில டவுன் பஸ்கள் தவிர பெரும்பாலான பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் செல்லாததால் பயணிகளை ரோட்டிலேயே ஏற்றி, இறக்கி விடும் அவல நிலை உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் ரெயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகளை மெயின் ரோட்டிலேயே இறங்கி சுமைகளை தூக்கிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வயதான பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.மேலும் பஸ் நிலையத்திற்குள் அமைந்துள்ள பேரூராட்சி வணிக வளாகத்தில் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள் வியாபாரமின்றி தவிக்கும் நிலை உள்ளது. கட்டுமானப்பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாலும் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதாலும் தாய்மார்கள் பாலூட்டும் அறை,பொதுகழிவறை ஆகியவற்றை பயன்படுத்துவதில் பெரும்சிரமம் உள்ளது. தாலுகா தலைநகரான மடத்துக்குளம் பகுதியில் மக்கள் சந்திக்கும் இன்னல்களைக்களைய பஸ்நிலைய தரைத்தளம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: