Wednesday, September 07, 2016

On Wednesday, September 07, 2016 by Unknown in    

           உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க தமிழகத்துக்கு கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 10,000 கன அடி தண்ணீர், கபினி அணையில் இருந்து 5000 கன அடி தண்ணீர் என மொத்தம் 15,000 கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.      தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் பரவலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

மைசூர், மாண்டியா பகுதியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சாலையோரங்களில் பந்தலிட்டு சமைத்து சாலையில் அமர்ந்து சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கே.ஆர்.எஸ். அணைப் பகுதியில் பிரம்மாண்ட பேரணிக்கு கன்னட ரக்‌ஷன வேதிக, ஜெய் கர்நாடகா சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

        பேருந்துகள் நிறுத்தம்:

ஒசூரில் தமிழக - கேரள எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து செல்லும் பேருந்துகள் எல்லையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல் கர்நாடகாவிலிருந்தும் தமிழகத்துக்குள் பேருந்துகள், வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்

    தமிழகத்திலிருந்து வந்த பேருந்துகளை எல்லையிலேயே தடுத்து நிறுத்தி எதிர்ப்பு வாசகங்களை பதிவு செய்யும் கர்நாடக விவசாயிகள் சங்கத்தினர் | படம்: கே.முரளிகுமார்.

மாநில அரசுக்கு கண்டனம்..

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு மாநில அரசே காரணம் எனக் கூறி பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் சித்தராமைய்யா உருவ பொம்மையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக பாஜக பிரமுகரும் மேலவை எதிர்க்கட்சித் தலைவருமான ஈஸ்வரப்பா கூறும்போது, "கர்நாடக அரசு காவிரி விவகாரத்தை திறமையாக கையாளவில்லை. இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலி எஸ் நாரிமனும் சிறப்பாக செயல்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் யாருடைய ஒப்புதலைப் பெற்று அவர் 10,000 கன அடி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்துவிடுவதாக ஒப்புதல் அளித்தார் என்பது தெரியவில்லை. காவிரி வழக்கில் கர்நாடகா சார்பில் இனியும் நாரிமன் வாதிட அனுமதிக்கக் கூடாது" என்றார்.

தமிழர்கள் பகுதியில் பாதுகாப்பு:

கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான சிவாஜி நகர், விவேக் நகர், அல்சூர், கிழக்கு பெங்களூரூ முழுவதும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாண்டியா, மைசூரு திரையரங்குகளில் தமிழ்ப்படங்கள் திரையிடல் நிறுத்தப்பட்டன. பெங்களூரு நகருக்குள் மட்டும் ஓரிரண்டு அரங்குகளில் தமிழ்ப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. அதுவும் இன்றைக்கு நிறுத்தப்படும் எனத் தெரிகிறது.

முதல்வர், உள்துறை அமைச்சர் வேண்டுகோள்:

மாநிலம் முழுவதும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், காவிரி விவகாரத்தில் பொதுமக்கள், விவசாயிகள் அமைதி காக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார். பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது, மக்கள் வன்முறையை விடுத்து அமைதி காக்க வேண்டும் என மாநில உள்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்

0 comments: