Thursday, September 08, 2016

On Thursday, September 08, 2016 by Unknown in    


திருப்பூரில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல மாநகர் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.இந்த நிலையில் திருப்பூர் ஸ்ரீநகரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பின் பிரிவு ஸ்ரீநக ர் கிளை சார்பில் விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பின் மாநில இணை அமைப்பாளர் காசி விஸ்வநாதன் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு மாநகர தலைவர் திருச்செல்வம், பஜ்ரங்தள் மாவட்ட தலைவர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருப்பூர் ஸ்ரீநகர் ஜமாத் கமிட்டியின் தலைவர் நாதர்ஷா அலி மற்றும் நிர்வாகிகள் அரோமா நவ்ஷாத், ஆரிப் ஆகியோர் கலந்து கொண்டு விநாயகர் சிலை ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் பா.ஜனதா தொழிற்சங்க மாவட்ட பொறுப்பாளர் முருகன், தி.மு.க. 29–வது வார்டு பொறுப்பாளர் மதிவாணன், ஐ.ஜே.கே. மாவட்ட செயலாளர் மனோகரன், பஜ்ரங்தள் அமைப்பு ஸ்ரீநகர் கிளை நிர்வாகிகள் காசி, கணேஷ், குமார், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பூரில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கொடி அசைத்து வைத்த சம்பவம் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

0 comments: