Thursday, September 29, 2016

On Thursday, September 29, 2016 by Unknown in    

தாராபுரம்தாராபுரம் அருகே கோழிப்பண்ணையிலிருந்து வெளியேறும் கோழி இறகுகளால் 5 கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் கோழிப்பண்ணையை மூடக்கோரி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோழிப்பண்ணை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கரைப்புதூரில் தனியாருக்கு சொந்தமான முட்டை கோழிப்பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளின் இறகுகள் காற்றில் பறந்து சென்று அருகே உள்ள விளை நிலங்களில் விழுந்து கிடப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆடு,மாடுகள் கோழி இறகுகளை சாப்பிட்டு விடுவதால் இறந்துபோகின்றன. சுகாதாரகேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் ஒன்று திரண்டு சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணையை மூடக்கோரி கோழிப்பண்ணை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கரைப்புதூர் கிராம மக்கள் கூறியதாவது:–5 கிராம மக்கள் அவதி

எங்கள் கிராமத்தில் கடந்த ஒரு வருடமாக தனியார் கோழிப்பண்ணைகள் சில அமைக்கப்பட்டன. அப்போது கிராம மக்கள் இதற்கு எதிர்ப்புதெரிவிக்கவில்லை. காரணம் கறிக்கோழிக்காக அமைக்கப்படும் பண்ணை என்று நினைத்து விட்டோம். ஆனால் இந்த கோழிப்பண்ணைகளில் முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஒரு பண்ணையில் மட்டும் சுமார் 50 ஆயிரம் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.இந்த பகுதியில் இதுபோல் 4 கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த கோழிகளிலிருந்து விழும் இளம் இறகுகள் காற்றில் பறந்து வருகிறது. அவ்வாறு பறந்து வரும் இறகுகள் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கரைப்புதூர், சிறுகிணறு, மணல்திட்டுப்பாளையம், கொத்தனூர், எஸ்.ஆலாம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் விழுந்து விடுகிறது. இதனால் காடுமுழுவதும் கோழி இறகுகளாக பரவிக்கிடக்கிறது. விவசாயம் செய்ய முடிவதில்லை. மேய்ச்சலின் போது ஆடு, மாடுகள் தெரியாமல் இறகுகளையும் சேர்த்து சாப்பிட்டு விடுகின்றன. இதனால் அவைகள் இறந்துபோகின்றன. கோழி இறகுகளை சாப்பிட்டு இதுவரை 2 மாடுகளும், 4 ஆடுகளும் இறந்து உள்ளன. காற்று மாசடைந்து விட்டதால், இப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளது, நீர் நிலைகள் மாசடைந்து விட்டதால் தொற்று நோய்கள் பரவி வருகிறது. இப்பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவரின் குழுந்தைகள் அபூர்வா (வயது 12) மற்றும் அபர்ணா (4) ஆகியோருக்கு மர்ம காய்ச்சல் வந்து கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது சம்பந்தமாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்குள்ள கோழிப்பண்ணைகளால் 5–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த கோழிப்பண்ணையை உடனே மூடவேண்டும் என்று கோழிப்பண்ணைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

0 comments: