Saturday, September 10, 2016

On Saturday, September 10, 2016 by Unknown in    


திருப்பூர் கொங்குநகர் விரிவு முதல் வீதியை சேர்ந்தவர் உமாசங்கர் (வயது 50 ). இவர் கடந்த பல ஆண்டுகளாக திருப்பூரில் என்.பி.சான்டெக்ஸ் என்ற பெயரில் பனியன் நிறுவனம் மற்றும் பனியன் தொழில் சார்ந்த நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதன் அடிப்படையில் உமாசங்கர் திருப்பூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் திருப்பூர் வணிக கிளையில் கடந்த 2008–ம் ஆண்டு ரூ.200 கோடி கடன் பெற்றுள்ளார். ஆனால் உமாசங்கர் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடன் தொகையான ரூ.200 கோடியுடன் வட்டி ரூ.54 கோடியை சேர்த்து ரூ.254 கோடியாக செலுத்துமாறு உமாசங்கருக்கு வங்கி தரப்பில் இருந்து நோட்டீசு அனுப்பப்பட்டது. அதன்பிறகு அவர் கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை. இதுதொடர்பாக வங்கி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வங்கியில் வாங்கிய கடனை உமாசங்கர் திருப்பி செலுத்தாததால் அவருக்கு சொந்தமான சொத்துக்களை ஜப்தி செய்யுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.ஜப்தி நடவடிக்கை

இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி உத்தரவின் பேரில் திருப்பூர் ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமையில் அந்த பாரத ஸ்டேட் வங்கியின் கோவை ஒடுக்கப்பட்ட சொத்துகள் நிர்வாக கிளையின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவினர் மற்றும் அவினாசி தாசில்தார் சுப்பிரமணியம், அனுப்பர்பாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் முதற்கட்டமாக நேற்று காலை திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி பிரிவு அருகில் உள்ள உமாசங்கருக்கு சொந்தமான இடத்திற்கு சென்றனர். பின்னர் அந்த பகுதியில் உமாசங்கருக்கு சொந்தமான ரூ.4¼ கோடி மதிப்பிலான 4.55 ஏக்கர் பரப்பளவில் யோகேஷ் கிளாத்திங் நிறுவன கட்டிடம் மற்றும் அதன் அருகில் ரூ.5 கோடி மதிப்பிலான 1.52 ஏக்கர் பரப்பளவில் இருந்த என்.பி.சான்டெக்ஸ் கிளாத்திங் பிரைவேட் லிமிடெட் கட்டிடம் என மொத்தம் ரூ.9¼ கோடி மதிப்பிலான சொத்துகளை அதிகாரிகள் ஜப்தி செய்தனர். மேலும் ஜப்தி செய்யப்பட்ட கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைத்த ஆர்.டி.ஓ. முருகேசன் அதன் சாவியை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.பரபரப்பு

முன்னதாக உமாசங்கருக்கு சொந்தமான சொத்துக்களை ஜப்தி செய்ய அதிகாரிகள் சென்ற போது அங்கிருந்த கட்டிடங்கள் பூட்டப்பட்டிருந்ததால் கட்டிடங்களின் பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்றனர். மேலும் கட்டிடத்திற்கு உள்ளே இருந்த ஆவணங்கள் மற்றும் பொருட்களையும் அதிகாரிகள் பார்வையிட்டனர். திருப்பூரில் பிரபல பனியன் நிறுவன உரிமையாளர் ஒருவர் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அவருக்கு சொந்தமான பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை அதிகாரிகள் ஜப்தி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: