Monday, October 24, 2016

On Monday, October 24, 2016 by Unknown in    


தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை பட்டாசுகடை விற்பனையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா ஆகியோர் முன்னிலைவகித்தனர்.கூட்டத்தில் கலெக்டர் எஸ்.ஜெயந்தி பேசும்போது கூறியதாவது:–நிரந்தர பட்டாசு கடை உரிமங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை விபத்தில்லாத பண்டிகையாக கொண்டாடுவதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் உள்ள நிரந்தர பட்டாசு உரிமங்கள், சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.க்களால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள நிரந்தர பட்டாசு உரிமங்களை மாநகர போலீஸ் துறை புதுப்பித்தும், தற்காலிக பட்டாசு உரிமங்களையும் வழங்கி வருகிறது. ஊரக பகுதிகளில் உள்ள தற்காலிக பட்டாசு கடைகளுக்கு போலீஸ்துறை, தீயணைப்பு துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் பரிந்துரை அடிப்படையில் மாவட்ட வருவாய் அதிகாரியால் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் உரிமம் வழங்கப்படுகிறது. மேற்படி நிரந்தர பட்டாசு உரிமங்களை புதுப்பித்து வழங்கும் போது ஆர்.டி.ஓ.க்கள் ஆய்வு செய்து தகுதியான இனங்களுக்கு மட்டுமே உரிமம் வழங்க வேண்டும்.திருப்பூர் மாவட்ட ஊரக பகுதிகளில் தற்காலிக பட்டாசு உரிமம் வழங்கப்படும் இடங்களின் விபரம் சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட தீயணைப்பு அதிகாரி, ஆர்.டி.ஓ.க்கள் மற்றும் தாசில்தார்களுக்கு தெரிவிக்கப்படும். ஆர்.டி.ஓ.க்கள் தங்கள் கோட்டத்தில் உள்ள பட்டாசு கடை உரிமையாளர்கள், துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும்.அதிகாரிகளை கொண்ட ஆய்வுக்குழு

வருவாய், காவல் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகளை கொண்ட வட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்களை அமைத்து, அந்த குழுக்கள் பட்டாசு கடைகளை தொடர்ந்து கண்காணிக்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இந்த குழு அனுமதி பெறாமல் இயங்கும் பட்டாசு கடைகளை கண்காணித்து அவற்றை உடனடியாக அகற்றவும், சம்பந்தப்பட்ட நபர்களின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக பட்டாசு கடை குறைந்தபட்சம் 9 சதுர மீட்டர் அளவும் அதிகபட்சம் 25 சதுரமீட்டர் அளவுடன் தரை தளத்தில் மட்டுமே அமைந்திருக்க வேண்டும். கட்டிடத்தின் அடித்தளத்திலும், இரண்டு மாடிகளுக்கு நடுவிலும் அமைக்க கூடாது. மேல் தளத்தில் குடியிருப்பு ஏதும் இருக்கக்கூடாது. எளிதில் தீ பற்றக்கூடிய அல்லது வெடிபொருட்கள் இருப்பு வைக்கப்படும் மற்ற கடைகளில் இருந்து குறைந்தபட்சம் 15 மீட்டர் தொலைவில் அமைந்திருக்க வேண்டும். பாதை குறைந்தபட்சம் 6 மீட்டர் அகலம் இருக்க வேண்டும்.எண்ணெயில் எரியும் விளக்குகள், பாதுகாப்பற்ற மின் இணைப்புகள், சுவிட்ச் போர்டுகள் போன்றவை அனுமதியில்லை. ஐ.எஸ்.ஐ. தர முத்திரையுடன் கூடிய தீயணைப்பான்கள் மற்றும் மணல் வாளிகள், தண்ணீர் வாளிகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். கடைக்கு பிரதான வாசல் மற்றும் அவசர காலவழி ஆகிய 2 வாசல்கள் இருக்க வேண்டும். கதவுகள் நல்ல இயங்கும் நிலையில் இருக்க வேண்டும். பட்டாசு கடைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் போது உரிய பதிவேடுகளை காண்பிப்பதுடன், ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.உரிமம் ரத்து செய்யப்படும்

மேலும், தற்காலிக கொட்டகைகள் எளிதில் தீ பிடிக்காத பொருட்களாலும், குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளிகளில் அமைக்கப்பட வேண்டும். எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களில் இருந்து 50 மீட்டர் தொலைவில் அமைக்கப்படவேண்டும். மின் சாதனங்கள் கொட்டகையின் வெளிபுறத்தில் அமைக்கப்பட வேண்டும். பட்டாசுகளை இருப்பு வைக்க குறிப்பிட்டுள்ள பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவிர மற்ற பகுதிகளில் இருப்பு வைக்கக்கூடாது. பார்வையாளர்களுக்கும் பட்டாசுகள் காட்சிக்காக வைக்கப்படும் இடத்திற்கும் குறைந்தபட்சம் 10 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பட்டாசு வகைகளை, உரிய உரிமம் பெற்றுள்ள நபர்கள் மற்றும் நிறுவனத்திடம் மட்டுமே வாங்கி விற்பனை செய்ய வேண்டும். உரிமம் பெற்றுள்ள நபர்களும் உரிய முறையில் பட்டாசு கொள்முதல், விற்பனை, இருப்பு போன்ற கணக்கு விபரங்களை பராமரிக்க வேண்டும்.உரிம இடத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் மற்றும் அயல் நாட்டில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. உரிய அனுமதி பெறாமல், கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் செயல்படும் பட்டாசு கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். தற்காலிக பட்டாசு உரிமத்தாரர் தனது உரிமத்தை தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்டத்தின்படி பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திஷாமிட்டல், ஆர்.டி.ஓ.க்கள் முருகேசன்(திருப்பூர்), சாதனைக்குறள்(உடுமலைப்பேட்டை), தீயணைப்புத்துறையினர் மற்றும் பட்டாசு கடை உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: