Tuesday, December 26, 2017

On Tuesday, December 26, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி மண்ணச்சன்னல்லூர் நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு பூமிநாதர்  கோவிலுக்கு வாங்க 

இந்துக்களின் ஐதீகப்படி ஒவ்வொரு செயல்களுக்கும், ஒவ்வொரு நோய்களுக்கும், ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் என்று பல கோவில்கள், தெய்வங்கள் என்று தேடி அலைந்து வழிபடும் கலாச்சாரம் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் இல்லை. 
அப்படிப்பட்ட பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று நிலம்(மண்) தொடர்பான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாகக் கூறப்படும் திருச்சி மாவட்ட மண்ணச்சநல்லூர் பூமிநாதர் கோவில் மிகச்சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக பக்தர்களால் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. 
18ஆம் நுற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோவிலுக்கு என்று ஒரு சுவாரஸ்யமான தகவல் உண்டு. சிவனுக்கு என்று பல பெயர்கள் உண்டு, அதில் இங்கு எடுத்துள்ள அவதாரம் பூமிநாதன் என்ற அவதாரம் தான். 
அந்தகாசுரன் என்று சொல்லப்படும் ஒரு அரக்கன் தேவர்களுக்கு தொடர்ந்து பல தொல்லைகள் கொடுத்து வந்துள்ளான். அரக்கனின் தொல்லையை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்த தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டுள்ளனர். தேவர்களின் கோரிக்கைக்கு இணங்கச் சிவபெருமான் அரக்கனை அழித்தபோது அவருடைய நெற்றியிலிருந்து ஒரு துளி வியர்வையைப் பூமியில் விழுந்து பூதமாக மாறியது. அந்தப் பூதம் யுத்த களத்தில் கிடந்த உடல்களை தின்று பசி அடங்காத பூதம் தன்னுடைய பசியை தீர்த்து வைக்க வேண்டும் என்று சிவபெருமானை நோக்கி தவம் இருந்தது. அதன் முன் தோன்றிய சிவபெருமான் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் என்று கூறியவுடன் இந்த மூன்று உலகங்களையும் அழிக்கும் திறன் எனக்கு வேண்டும் என்று கேட்டவுடன் சிவபெருமான் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் வரத்தை அளித்தார். 
முதலாவதாகப் பூமியை விழுங்க முயற்சித்த பூதத்தை தேவர்கள் தடுத்து நிறுத்தி பூதத்தை கீழே தள்ளி குப்புறப்படுக வைத்து பூதத்தை அழுத்தி பிடித்துள்ளனர். இதனால் தன்னுடைய பசிக்கான உணவைத் தேடி அலைய முடியாததால் தனக்கான உணவை நீங்களே வழங்க வேண்டும் என்று முறையிட்டது. எனவே முதலாவதாக விழுங்கும் 45 தேவர்களின் சக்தி பூதத்தை அழுத்திப் பிடித்திருக்கும் என்றும், உனக்கான உணவு பண்டங்கள் பூமியில் உள்ள மக்கள் வீடு கட்டும் போது அவர்கள் செய்யும் பூஜையில் வழங்கும் பொருள்களும், விதிமுறையின்றி செய்யப்படும் யாகங்களில் இருந்து வழங்கப்படும் பொருள்களும் உனக்கு உணவாகட்டும் என்றும், வரம் அளித்தனர். மேலும் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் 36 நிமிடங்கள் நீ எழுவதற்கு அனுமதி அளிக்கிறோம் என்றும், இன்று முதல் வாஸ்துபுருஷன் என்று அழைக்கப்படுவாய் என்றும் வரம் அளித்தனர். அதற்கு நன்றிக் கடனாக பூதமாகிய நீ பூமியில் எழுப்பப்படும் வீடு, கட்டிடங்களை எந்தவித குறைபாடுமின்றி, தங்கு தடையில்லாமல் முடித்துத் தர வேண்டும் என்றனர். அந்தப் பூதத்தின் முகம் இந்த மண்ணில் புதைந்ததால் தான் அது மண்ணச்சநல்லுர் என்று அழைக்கப்படுவதாக வரலாறு கூறப்படுகிறது. 
தற்போது இந்தக் கோவிலில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக உள்ளார். பெரும்பாலான கோவில்களில் பைரவர் தெற்கு நோக்கி அமர்ந்தவாறு வடிவமைக்கப்பட்டிருக்கும், ஆனால் இந்தக் கோவிலில் மேற்கு பார்த்த திசையில் அமர்ந்திருக்கிறார். 
இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் வீடு கட்ட துவங்கும் முன்பும், நிலம் வாங்கும் முன்பு, நிலத்தில் வடகிழக்கு திசையில் இருந்து ஒருகைபிடி மண்ணை எடுத்து மஞ்சள் துணியில் கட்டி வீட்டின் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து வாஸ்து நாள் அன்று பூமிநாதர் கோவிலுக்கு அந்த மண்ணை எடுத்து வந்து தன்னுடைய பெயரில் அர்ச்சனை செய்து, அந்த மண் முடிப்புடன் கருவறையை 36 முறை சுற்றிவந்து முகப்பு மண்டபத்தில் கட்டிவிட வேண்டும். வீடோ, கட்டிடமோ கட்ட துவங்கும் போது மீண்டும் மண்டபத்தில் கட்டிய மண் முடிப்பைக் கோவில் வளாகத்தில் உள்ள வில்வ மரத்தில் கொட்டிவிட்டு வன்னிய மரத்தின் கீழ் உள்ள மண்ணில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்துச் சென்று வடகிழக்கு மூலையில் போடுவதால் தங்கு தடையின்றி கட்டிட பணிகள் நிறைவடையும் என்று கூறுகின்றனர். 
மேலும் நிலம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் இருந்தாலும், அந்த நிலத்தில் இருந்து இடத்திற்கு சொந்தமான இரத்த உறவுகள் ஒருபிடி மண்ணுடன் இந்தக் கோவிலுக்கு வந்து பூஜை செய்தால் வழக்குகள் அவர்களுக்கு சாதகமாக அமையும் என்றும், அப்படிக் கொண்டு வரும் நிலம் தொடர்பான பிரச்சனையில் உண்மைத் தன்மை இல்லாமல் இருந்தால் சிவன் சொத்தை அடைய நினைத்தால் சர்வநாசம் என்று கூறுகின்றனர். 
ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலைத் தேடி திருச்சி மாவட்டம் மட்டுமின்றி சுற்று பகுதிகளில் கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை, சேலம், மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேண்டுதல்களுடன் வந்து செல்கின்றனர். இன்றுவரை நிலம் தொடர்பான பிரச்சனைகள் இந்தக் கோவிலுக்கு வந்தவர்கள் சிவனின் அருளினால் நன்மையை மட்டுமே பெற்று சென்றுள்ளதாக கூறுகின்றனர்.


பேட்டி .....சிவத்தொண்டன் 

0 comments: