Tuesday, June 09, 2020

On Tuesday, June 09, 2020 by Tamilnewstv in    
திருச்சி நாடாளுமன்றத்  உறுப்பினர் திரு நாவுக்கரசர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாய் செலவில் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை வகித்தார். 

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வழங்கினார். அதன் பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  கொரோனா வைரஸ் உண்மையாக பாதித்தவர்களுக்கு இன்னும் பரிசோதனை செய்யப்படவில்லை. 

 உண்மையாக பாதித்தவர்களுக்கு எல்லாம் பரிசோதனை செய்து இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் இடம் இருந்திருக்காது. அதனால் தான் தற்போது தனியார் மருத்துவமனைகள் வசமுள்ள 25 சதவீத படுக்கைகளை கையகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. 

 ஆனால் இது போதுமானது கிடையாது. 50 சதவீத படுக்களை கையகப்படுத்த வேண்டும். அதேபோல் அனைவரிடமும் தமிழக முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட அட்டை இருக்க வாய்ப்பு இல்லை. மேலும் தனியார் மருத்துவமனைகளில் 15 நாட்கள் வரை ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருந்தால் பல ஆயிரம் ரூபாய் செலவாகும். இதனால் கொரோனா மேலும் தீவிரமடையும். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். ஆகையால் கரோனா சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும். மக்களுக்கு உடனடியாக ரொக்கம் தேவைப்படுகிறது. அதனால் மாநில அரசு 7,500 ரூபாய், மத்திய அரசு 5,000 ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கைவிட வேண்டும். வீட்டு இணைப்புக்கான மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானதாக இல்லை. 

 அரசு உத்தரவை மக்கள் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தனியார் நிறுவனங்களும் மூன்று மாதமாக மூடிக் கிடப்பதால் அவர்களால் சம்பளம் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்குறைப்பு செய்கிறார்கள். ஆகையால் நலிந்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்யவேண்டும். சலுகைகளை அறிவிக்க வேண்டும். கடன் கொடுக்க வேண்டும். கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.  கரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் திருப்தி இல்லை. குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு இரண்டு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மையம் ஏற்படுத்த வேண்டும். அரசின் உத்தரவை தனியார் மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும் என்றார்.

0 comments: