Sunday, April 04, 2021

On Sunday, April 04, 2021 by Tamilnewstv   

 திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.


இன்று துறையூர் குட்டகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் திறந்த ஜீப்பில் நின்றவாறு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், நான் 10 ஆண்டுகளாக காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பில் பொது வார்டு மற்றும் எஸ்சி வார்டுகளில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டேன். மக்களுக்கு கவுன்சிலராக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். சட்டமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றால் துறையூரை தனி மாவட்டமாக மாற்ற முயற்சி செய்வேன்.

அரசு கலைக்கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி கூடம், தொழிற்பேட்டை ஆகியவை துறையூர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் துறையூர் பகுதியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் முசிறியில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டம் துறையூருக்கு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அதிமுக சார்பில் போட்டியிடும் இந்திராகாந்தி ஏற்கனவே ஐந்து ஆண்டுகள்  சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அதேபோல் திமுக சார்பில் போட்டியிடும் ஸ்டாலின் குமாரும் ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவர்கள்  இரண்டாவது முறையாக மீண்டும் வந்து வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது துறையூருக்கு என்ன செய்தார்கள்? என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஆகையால் முதன்முறை போட்டியிடும் புதியவரான எனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் துறையூரை வளர்ச்சி நிறைந்த மாவட்டமாக மாற்றி காட்டுவேன். நான் கவுன்சிலராக இருந்த போதே மக்களுக்காக போராடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். அதேபோல் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் கண்டிப்பாக போராடி திட்டங்களை கொண்டு வருவேன். துறையூர் அருகே உள்ள பச்சமலைக்கு இரு வழிப் பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். துறையூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சின்னேரியை தூர் வாரி படகு சவாரி விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைச் செயலாளர் ரவி, நகர அவைத் தலைவர் அன்பழகன், ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ், மாவட்ட அவைத்தலைவர் துரைராஜ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் சின்னவர், நிர்வாகிகள் சந்தோஷ், குகன், எம்ஜிஆர் மன்ற தலைவர் பழனிராஜன், மாவட்ட பிரதிநிதி குட்டி, கூட்டணிக் கட்சியான தேமுதிக நகர செயலாளர் சதீஷ், செல்லதுரை, மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் சென்றனர்.

0 comments: