Tuesday, March 24, 2020

On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 24
              

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இரு மெயின்  வாசல்கள் மூடப்பட்டு நோயாளிகள்,
நோயாளியின் உதவியாளர் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பார்வையாளர்கள் அனுமதி முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி புத்தூரில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இதில்  160க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
நாள்தோறும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
 1200 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையில் தற்போது 650 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில்
பொது இடத்தில் அதிக அளவில் மக்கள் கூட வேண்டாம் என அரசு அறிவுறுத்திய நிலையிலும்  அதனை பொருட்படுத்தாது மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் கூடியுள்ளனர்.
அதேபோல நோயாளிகள் அதிக அளவில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர்.
பார்வையாளர்கள் பெரும்பாலும் முக கவசம் அணியாமலேயே மருத்துவமனை உள்ளே சென்று வருகின்றனர்.
இது குறித்து அவர்களிடம் விசாரித்த போது மருத்துவமனையில் முகக் கவசங்கள் போதிய அளவில் ஸ்டாக் இல்லை என நிர்வாகத் தரப்பு கூறுவதாக
பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் இன்று முதல் பார்வையாளர்கள் அனுமதி இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.


On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 23

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை,
மத்திய பாதுகாப்பு படை கலன் தொழிற்சாலைகளான துப்பாக்கி தொழிற்சாலை,
ஹெச்.ஏ.பி.பி, தொழிற்சாலைகள்
 கொரனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊழியர்களுக்கு
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
                    

ஆங்கிலேயர் காலத்தில்
கடந்த 1926 ம் துவக்கப்பட்டு நூற்றாண்டு காண உள்ள   பொன்மலை  ரயில்வே பணிமனையில், ரயில் இஞ்ஜின் பழுதுநீக்குதல், ரயில் பெட்டி தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.
இதில் சுமார் 4ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

                  

தற்போது கொரனாவைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
 இன்று முதல் 25ம் தேதி வரை 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதாக  பொன்மலை ரயில்வே பணிமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் நுழைவாயில் மூடப்பட்டு பணிமனை வெறிசோடி  காணப்படுகிறது.
விடுமுறை குறித்த தகவல் தெரியாத சில பணியாளர்கள் பணிமனைக்கு வந்து திரும்பி சென்றனர்.

அசாதாரண சூழல் காரணமாக
தொடர்ந்து 3 நாட்கள் பணிமனைக்கு விடுமுறை விடப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

இதே போல்
திருவெறும்பூர் அருகே சுமார் 900க்கு மேற்பட்டோர் பணி புரியும் மத்திய பாதுகாப்பு படை கலன் தொழிற்சாலைகளான துப்பாக்கி தொழிற்சாலை, மற்றும் 2000க்கு மேற்பட்டோர் பணிபுரியும் ஹெச்.ஏ.பி.பி தொழிற்சாலைகள் கொரொனோ வைரஸ் பீதி காரணமாக இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய பணிகளை வீட்டிலிருந்து மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிற்சாலைக்குள் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், மருத்துவம், மின்சாரம் உள்ளிட்ட பணிகளை பார்க்கும் தொழிலாளர்கள் மட்டுமே வந்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்டடுள்ளனர்.


On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 23
                          
   
திருச்சி அரசு மருத்துவமனையில்
கொரோனா அறிகுறியுடன்
குழந்தை உட்பட 2 பேர் அனுமதி. - டீன் வனிதா தகவல்.
                 

திருச்சியில் இதுவரை  கொரோனா வைரஸ்  அறிகுறியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் ஈரோடு, நாமக்கல், திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் உட்பட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 7பேர் சிகிச்சை பெற்று  கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.


              

இந்நிலையில் தற்போது
சளி, இருமல், காய்ச்சல் (கொரோனா) அறிகுறியுடன் திருச்சி பகுதியை சேர்ந்த
3வயது குழந்தை உட்பட  2பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   மொத்தம் 9பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது  ரத்த மாதிரி சோதனையில்
4பேருக்கு ெ காரனா அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது என
டீன் வனிதா தெரிவித்துள்ளார்.
On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 23

வெளிநாட்டில் இருந்து வந்த சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 22 பேர் வீடு திரும்பினர்.

                      
                   

துபாய், சார்ஜா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்கூட் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த வெளிநாட்டினர்

                   


12பெண்கள்  உட்பட
22பேர் திருச்சி கள்ளிக்குடி சிறப்பு சுகாதார வளாகத்தில்  சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு  தொடர் சிகிச்சை  வந்த நிலையில், அனைவருக்கும் கொரோனா பாதிப்பு  இல்லை என உறுதியானதையடுத்து  தற்போது அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்கள். தற்போது இயங்கி வரும் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதித்தவர்கள் யாரும் இல்லை.

Sunday, March 22, 2020

On Sunday, March 22, 2020 by Tamilnewstv in    
பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் படி இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு நடைபெற்று வருகிறது.


கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

 இந்த வகையில்  திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும்  வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை ஏற்றி வரும் விமானம் வந்து செல்கிறது.
 இந்த வகையில் இன்று காலை சிங்கப்பூரில் இருந்து 163 பயணிகளும், சார்ஜாவில் இருந்து 136 பயணிகளும், துபாயில் இருந்து 86 பயணிகளும் திருச்சி வந்தனர். இதில் மொத்தம் 385 பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. இதில் 12 பெண்கள் உட்பட22 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தது.


 இதையடுத்து அவர்கள் திருச்சி கள்ளிக்குடியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக சிகிச்சை வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை நடைபெற்றது. அதில் அவர்கள் யாருக்கும் அத்தகைய வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகவில்லை. எனினும் அதில்  மலேசியாவிலிருந்து வந்த ஈரோட்டைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டும் வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறி இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
On Sunday, March 22, 2020 by Tamilnewstv in    
திருச்சி: கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக இன்று 22ஆம் தேதி சுய ஊரடங்கு உத்தரவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

மத்திய அரசும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இதை தொடர்ந்து மாநில அரசு சுய ஊரடங்கு கான ஏற்பாடுகளை செய்தது. இன்றைய தினம் அரசு போக்குவரத்து கழகங்களின் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டது.

அதேபோல் ரயில்வே நிர்வாகமும் அனைத்து ரயில் இயக்கத்தையும் நிறுத்தியது.  அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டன. திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ஜங்ஷன் ரயில் நிலையம், திருச்சி சர்வதேச விமான நிலையம் ஆகியவை பயணிகள் யாரும் வராததால் முற்றிலும் வெறிச்சோடி காணப்பட்டது. காந்தி மார்க்கெட், வணிக வளாகங்கள் திரையரங்கங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. சிறிய கடைகள் முதல் பெரிய அளவிலான கடைகள் வரை இன்று அடைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் உள்ள 96 திருமண மண்டபங்களில் இன்று பல்வேறு விசேஷங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த விசேஷங்களும் ஆட்சியரின் அறிவுரைப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த விசேஷங்களுக்கும் குறைந்த அளவிலான விருந்தினர்கள் மட்டுமே வந்திருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இது தவிர திருச்சி மாநகரில் எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் புத்தூர் நால்ரோடு, தலைமை தபால் நிலைய சந்திப்பு, ஒத்தக்கடை சிக்னல், கண்டோன்மென்ட், என் எஸ் பி ரோடு, தில்லைநகர்,


சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றியும், வாகன போக்குவரத்து இன்றியும் வெறிச்சோடி காணப்பட்டது. லாரி, வேன், கார், ஆட்டோ போன்ற வாகனங்களும் இன்று ஓட வில்லை. இதனால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன மக்கள் அதிக அளவில் கூடாத வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Saturday, March 21, 2020

On Saturday, March 21, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
 திருச்சி விமான நிலையத்தில் இருந்து கடந்த மார்ச் 8ஆம் தேதி முதல் வருகை தந்த வெளிநாட்டு பயணிகள் 3,400 பேருக்கு மருத்துவ குழுவினரால் விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 191 பேருக்கு சளி காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறி இருந்ததால் திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் கள்ளிக்குடி கொரோனா பிரத்யேக சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா தாக்குதல் இல்லை என்பது ரத்த பரிசோதனை முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.


இந்த வகையில் நேற்று துபாய், சார்ஜாவில் இருந்து வந்த 428 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 34 பேருக்கு சளி காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கள்ளிக்குடி தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய 191 பேரும் தொடர்ந்து மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மருத்துவ குழுவினர் தடுப்பு நடவடிக்கையில் பாராட்டுக்குரிய வகையில் ஈடுபட்டு வருகிறார்கள். நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்ற சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு வாகனங்கள் உள்பட அரசுப் பேருந்துகளும் நாளை நிறுத்தப்படும். காய்கறி, பால் போன்ற அத்தியாவசிய வாகனங்கள் மட்டும் செல்ல தடை கிடையாது. பொதுமக்கள் சாலையில் தேவையற்று கூட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. அத்தியாவசிய சிகிச்சை தவிர வேறு எதற்காகவும் வெளியில் வர வேண்டாம். மருத்துவமனை, பொது இடங்களில் நாளை கூடுவதை தவிர்க்க வேண்டும். காவல்துறையினர், மருத்துவக் குழுவினர்  நாளை பணியில் இருப்பார்கள்.
   ஏற்கனவே கொரோனா ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளும் மையம் இந்தியாவிலேயே புனேயில் மட்டும்தான் இருந்தது. இதற்கு அடுத்தபடியாக கிங்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஐந்து இடங்களில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இதில் ஒன்று திருச்சி அரசு மருத்துவமனையில் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நகர்ப்புறப் பகுதிகளில் கைகழுவும் விழிப்புணர்வு அதிக அளவில் உள்ளது. ஆனால் கிராமப்புற மக்களிடம் இது சற்று குறைவாக உள்ளது. மகளிர் சுய உதவி குழு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரவி மக்களை பீதி அடைய செய்யக் கூடாது. அவ்வாறு ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார்.
On Saturday, March 21, 2020 by Tamilnewstv in    
கொரோனா வைரஸ் நோய் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.

இந்த வகையில் இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வெளிநாடுகளுக்கு செல்லும் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்களிலும் சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்கம், மால்கள், ஜவுளிக்கடைகள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்டவற்றை இன்று 20ம் தேதி முதல் வரும் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதில் எந்தெந்த கோவில்கள் மூடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகியவை 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கம்போல பூஜைகள் நடைபெறும். ஆனால் பக்தர்கள் தரிசனம் கிடையாது என்ற அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
 இதைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலை முதல் பக்தர்கள் அருகில் உள்ள இதர கோவில்களுக்கு சென்றனர். ஆனால் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் பூட்டப்பட்டிருந்தது. முன்னறிவிப்பின்றி பூட்டப்பட்டு இருந்ததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மக்கள் அதிகம்  கூடுவதை தவிர்ப்பதற்காக கோவில்கள் மூடப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால் முன்கூட்டியே அறிவித்து இருந்ததால் கோவில்களுக்கு வந்திருக்க மாட்டோம் என்று பக்தர்கள் புலம்பிக் கொண்டு சென்றனர்.
 இந்த வகையில் திருச்சியில் உறையூர் வெக்காளியம்மன் கோவில், தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில், உறையூர் நாச்சியார் கோவில், திருவானைக்காவல், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் உள்பட அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சிறிய மற்றும் பெரிய கோவில்களும் இன்று காலை முதல் மூடப்பட்டிருந்தது.
On Saturday, March 21, 2020 by Tamilnewstv in    
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் அசரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் மைதீன் அப்துல் காதர் தலைமையில் அக்கட்சியினர் இன்று ஆட்சியர் சிவராசுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதில், உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மக்களிடம் இது குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மூடப்பட்டு இருப்பதால் தினக்கூலி தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சுய உதவிக்குழு, தினசரி பைனான்ஸ் கந்து வட்டி போன்றவர்களிடம் கடன் பெற்றுள்ளனர்.  இந்த கடன் வசூலை ஒருமாத காலம் நிறுத்தி வைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக்கடைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 மாதங்களுக்கு பூட்ட வேண்டும். மக்களுக்கு அத்தியாவசியமான மாஸ்க் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்கும் வகையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இவற்றை இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் 24 மணி நேரமும் தயாராக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.