Saturday, July 19, 2014

On Saturday, July 19, 2014 by Anonymous in ,    
சென்னையில் இருந்து குவைத்துக்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்

சென்னையிலிருந்து குவைத்திற்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் மற்றும் மெத்தாபெடாமைன் ஆகிய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

குவைத் செல்லும் விமானத்தில் பயணம் செய்வதற்காக சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். ராஜேந்திரன் ஷேசாத்திரி என்பரின் பையை சோதனையிட்டபோது, அவரது பையில் 1.1 கிலோ ஹெராயினும், 1.02 கிலோ மெத்தாபெடாமைனும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

போதைப்பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராஜேந்திரனை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் என்பதும், இதில் தொடர்புடைய மேலும் 3 பேர் விமான நிலையத்திற்கு வெளியில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வெளியில் இருந்த முகமது இப்ராகிம், விஜயகுமார், முகமது ரபீக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கேரளாவைச் சேர்ந்த ஒரு நபர், போதைப் பொருட்களை குவைத்தில் கொண்டு சேர்க்கும்படி கூறியதாக அவர்கள் தெரிவித்தனர். போதைப் பொருளை கொடுத்து அனுப்பிய கேரள நபர் மற்றும் குவைத்தில் உள்ள கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

0 comments: