Thursday, July 24, 2014

On Thursday, July 24, 2014 by Anonymous in    
தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், தமிழக சித்த மருத்துவத் துறை ஆணையர் அபூர்வா ஆலோசனையின்பேரில், பொதுமக்கள் அனைவரின் உடல் நலம் காக்க, வாரத்தில் ஒரு நாள் ஒவ்வொரு வகையான சூப் வழங்கும் துவக்க விழா, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது.
பழனியில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி மரு. புகழேந்தி, பங்கேற்றார். முன்னதாக இவர், சித்த மருத்துவப் பிரிவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: இந்த சூப் வழங்கும் திட்டம், பொதுமக்கள் அனைவரும் நோய் நொடியின்றி வாழவும், நோய் வரும் முன் தடுக்கும் பொருட்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில், சூப்பினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரித்து, வாரத்தில் ஒரு நாள் பொதுமக்களுக்கு வழங்கப்படும். இன்று முதன்முதலாக பொன்னாங்கண்ணி சூப் வழங்கப்படுகிறது. இது, உடலை சுத்தப்படுத்தும். கல்லீரல் நோய்க்கு மிகவும் சிறந்த மருந்தாகும்.
திண்டுக்கல் மாவட்டத்திலேயே பழனி சித்தா மருத்துவப் பிரிவில் சிகிச்சைக்காக தினந்தோறும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், நோயாளிகள் சித்த மருத்துவத்தின் மூலம் அதிகம் பயனடைகின்றனர் என்பது தெரியவருகிறது.
எனவே, அதற்கேற்ப மருந்துகள் கூடுதலாக வழங்க உரிய நடவடிக்கைள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
பின்னர், விழாவில் பழனி சித்த மருத்துவ அதிகாரி மகேந்திரன் பேசினார்.
நிகழ்ச்சியில், பழனி அரசு மருத்துவ அதிகாரி இளங்கோவன் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் அனைத்துத் தரப்பு மருத்துவப் பணியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.
இதில், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு, வரிசையில் காத்திருந்து பொன்னாங்கண்ணி சூப்பை பருகி பாராட்டிச் சென்றனர்.

0 comments: