Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by TAMIL NEWS TV in ,    


லாரிகள் சிறைபிடிப்பு
அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஏரி. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது ஏரியில் தண்ணீர் இல்லாததால் வறண்டு காணப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஏரியை ஆழப்படுத்த ஈரோடு கனிமவளத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனையடுத்து கடந்த மாதம் மண் அள்ள டெண்டர் விடப்பட்டது. இதில் டெண்டர் எடுத்தவர்கள் ஏரியில் மண் அள்ளி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை டெண்டர் எடுத்தவர்கள் ஏரியில் மண் அள்ளி லாரிகளில் சென்று கொண்டிருந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் அங்கு வந்து லாரிகளை சிறைபிடித்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீசார், வருவாய் ஆய்வாளர் அழகேசன், கெட்டிசமுத்திரம் கிராம நிர்வாக அதிகாரி முருகேசன் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.
பேச்சுவார்த்தை
அவர்கள் லாரிகளை சிறைபிடித்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விவசாயிகள், ‘ஏரியில் அள்ளப்படும் மண் ஒரு லாரிக்கு ரூ.200 என்று விற்கப்படுகிறது. எண்ணமங்கலம், அந்தியூர், கெட்டிசமுத்திரம், கோவிலூர், பச்சாம்பாளையம், சின்னதம்பிபாளையம் உள்பட அந்தியூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயத்துக்கு வண்டல் மண்ணை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அதிக மகசூல் கிடைக்கிறது. எனவே ஏரியில் அள்ளப்படும் மண்ணை விவசாயிகளுக்கே மட்டுமே விற்க வேண்டும். செங்கல் சூளைக்கோ, சாலை அமைக்கவோ பயன்படுத்தக்கூடாது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
அதற்கு அதிகாரிகள், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை யாரும் ஏரியில் மண் அள்ளிச்செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றனர். அதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments: