Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by TAMIL NEWS TV in ,    
ஈரோட்டில் பட்டப்பகலில் கண்ணில் மிளகாய் பொடியை தூவி தனியார் கார் ஷோரூம் காசாளரிடம் ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்து, மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த துணிகர சம்பவம் குறித்த விவரங்கள் வருமாறு:-

காசாளர்

ஈரோடு குமலன்குட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). இவர் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு தனியார் கார் ஷோரூமில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் ஷோரூம் பணத்தை பெருந்துறை ரோடு யு.ஆர்.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் செலுத்த செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை 10 மணிக்கு ஷோரூமில் இருந்து சிவக்குமார் மொபட்டில் புறப்பட்டார்.

அவர் ரூ.6 லட்சம் பணத்தை ஒரு பையில் வைத்து வழக்கம்போல அவரது மொபட்டின் முன்பகுதியில் வைத்து இருந்தார். வங்கி அருகே சென்ற அவர், வங்கிக்கு செல்லும் வழியில் உள்ள சாலை தடுப்பு சுவரை சுற்றி வந்தார்.

மிளகாய் பொடி வீச்சு

தடுப்பு சுவரை கடந்து வருவதற்காக மொபட்டின் வேகத்தை சிவக்குமார் கட்டுப்படுத்தினார். அந்த நேரத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களில் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் சிவக்குமாரின் கண்ணில் மிளகாய் பொடியை வீசினார். மிளகாய் பொடி கண்ணில் பட்டதும் சிவக்குமார் எரிச்சலில் அலறித்துடித்தபடி தடுமாறி கீழே விழுந்தார்.

அதே நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் மொபட்டில் இருந்த ரூ.6 லட்சம் கொண்ட பணப்பையை கொள்ளையடித்துக்கொண்டு சிட்டாக பறந்து விட்டனர். கண் எரிச்சலில் துடித்துக்கொண்டிருந்த சிவக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ரோட்டில் இருந்து ஓரமாக அழைத்து வந்தனர்.

ஆஸ்பத்திரியில் சேர்ப்பு

இதுபற்றி தகவல் அறிந்த வீரப்பன்சத்திரம் போலீசார் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் காசாளர் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் கண்வலியால் துடித்துக்கொண்டு இருந்ததால் உடனடியாக அவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கண் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

இதுதொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளில் தப்பிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்.

பட்டப்பகலில்

கொள்ளை சம்பவம் நடந்த இடம் எப்போதும் பரபரப்பான பகுதியாகும். ஏராளமான வர்த்தக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் உள்ள வங்கியில் கணக்கு வைத்து உள்ளனர். அவர்கள் தினமும் இங்கே வருவதை கண்காணித்த கொள்ளையர்கள்தான் திட்டமிட்டு இந்த கொள்ளையில் துணிகரமாக ஈடுபட்டு உள்ளனர். மேலும், சம்பவம் காலை 10 மணி அளவில் நடந்து உள்ளது.

பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் ஏட்டுகள் ஆனந்த், தனசேகரன், பாபு மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

0 comments: