Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
உசிலம்பட்டி,

சேடபட்டி பகுதியில் ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படாததால், ஒன்றிய அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு

மதுரையை அடுத்த சேடபட்டி ஒன்றியம் சங்கரலிங்காபுரம் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சிரமமடைந்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து சிலநாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் 3 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டன. ஆனால் அவற்றிலும் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. தண்ணீர் கேட்டு மீண்டும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தநிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று உசிலம்பட்டி, பேரையூர் மெயின் ரோட்டில் உள்ள யூனியன் அலுவலகம் முன்பு வந்தனர். அங்கு அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகாரிகள் சமரசம்


இதுபற்றி தகவலறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சேடபட்டி, பேரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முனியாண்டி, முரளிதரன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சேடபட்டி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக்குமார், உடனடியாக டிராக்டர் டேங்கர்களில் குடிநீர் விநியோகம் செய்து பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்குமாறு ஊராட்சிமன்றத் தலைவருக்கு அறிவுறுத்தினார். ஒரு வாரத்திற்குள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.