Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,

அழகர்கோவில் ஆடித்திருவிழாவில் கள்ளழகர் கோவில் கோட்டை வாசலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் சந்தன சாத்துப்படி, மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
ஆடித்திருவிழா
மதுரையை அடுத்து உள்ளது பிரசித்திபெற்ற அழகர்கோவில். இங்கு நடைபெறும் சித்திரைத்திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். மேலும் மாதந்தோறும் வெவ்வேறு விழாக்களும் கோவிலில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் நடைபெறும் ஆடித்திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 2ந்தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் ஒவ்வொரு நாளிலும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து திருமஞ்சன திருவிழா போன்ற வைபவங்கள் நடைபெற்று ஆடித்திருவிழாவின் நிகழ்ச்சிகள் உற்சவசாந்தியுடன் இன்று நிறைவு பெறுகிறது.
சந்தன சாத்துப்படி
ஆடி பெருந்திருவிழாவினையொட்டி கோவிலின் கோட்டை வாசலில் உள்ள காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு சந்தனம் சாத்துபடி விழா மிக முக்கியமானதாகும். இதையொட்டி கருப்பணசாமி கோவிலில் ரோஜா, மல்லிகை, சம்மங்கி உள்பட பல்வேறு வண்ண மலர் மாலைகளும், எலுமிச்சம்பழ மாலைகளும் பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், காணிக்கையாகயும் வழங்கினர். அவற்றை கருப்பணசாமியின் திருக்கதவுகளுக்கு சாத்தப்பட்டது.
மேலும் பக்தர்கள் குடம் குடமாக வழங்கிய வாசனை திரவியங்கள் நிறைந்த சந்தனத்தை கதவுகளுக்கு சாத்தப்பட்டது. விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கருப்பணசாமி கோவிலில் நீண்ட வரிசையில் நின்று, கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதம் முழுவதும் அழகர்கோவிலிலுக்கு உள்ளுர், வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.