Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by Unknown in ,    
அறிவியலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் கருவியாக நாட்டுப்புறக் கலைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று, பாபா அணு ஆராய்ச்சி மைய (சென்னை) முதுநிலை விஞ்ஞானி ஜே. டேனியல் செல்லப்பா கூறினார்.
நாட்டுப்புறக் கலைகளின் வழியாக அறிவியல் கருத்துகளைப் பரப்புதல் என்ற தலைப்பில், மதுரை யாதவர் கல்லூரியில் நான்கு நாள்கள் நடைபெறும் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. இக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து, விஞ்ஞானி டேனியல் செல்லப்பா பேசியது:
அறிவியல்தான் அனைத்துக்கும் அடிப்படையாக இருக்கிறது. அறிவியல் இல்லையெனில் எந்தவொரு பொறியியலும், தொழில்நுட்பமும் கிடையாது. அறிவியல் கண்டுபிடிப்புகளையும், சாதனைகளையும் மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்லும்போதுதான், அத்தகைய கண்டுபிடிப்புகள் முழுமையடைகின்றன.
அந்த வகையில் பாபா அணு ஆராய்ச்சி நிலையும், அணு ஆராய்ச்சி மட்டுமின்றி மக்களுக்குத் தேவையான விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளிலும் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, பயறு வகைகளில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றான நிலக்கடலை ரகம், சிறைத் துறைக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இதில், சிறைவாசிகள் பயிரிட்டதில், ஒரு ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சம் நிகர லாபம் ஈட்டியுள்ளனர். இதேபோல், குறைந்த தண்ணீரைக் கொண்டு மேற்கொள்ளும் சாகுபடி தொழில்நுட்பங்கள், திடக்கழிவு மேலாண்மைத் தொழில்நுட்பம் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அவற்றை மக்களால் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய முறையில் கொண்டு சேர்க்கும்போதுதான், அதன் நோக்கம் நிறைவேறுகிறது.
இத்தகைய அறிவியல் தொழில்நுட்பங்களை மக்களுக்குக் கொண்டு செல்லக்கூடிய ஒரு கருவியாக நாட்டுப்புறக் கலைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.
கருத்தரங்கின் முதன்மை நெறியாளர் பி.எஸ். நவராஜ், புதுச்சேரி பல்கலைக்கழக மானுடவியல் துறைத் தலைவர் ஏ. செல்லபெருமாள், யாதவர் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எஸ். தனசேகரன், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் வி. கோபால் உள்ளிட்டோர் பேசினர்.

0 comments: