Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by Unknown in ,    
மதுரை மாநகராட்சி சார்பில், நான்கு மண்டலங்களிலும் அம்மா மக்கள் சேவை மையங்கள் தொடங்கப்பட்டு, ரூ. 96.7 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அனைத்து மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் சேவை மையங்கள் தொடங்கப்படும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, மதுரை மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களிலும் அம்மா மக்கள் சேவை மையங்கள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, மாநகராட்சி ஆணையர் சி. கதிரவன் ஆகியோர் இம்மையங்களைத் தொடங்கி வைத்தனர்.
பிறப்பு, இறப்புச் சான்றிதழ், வர்த்தக உரிமம், தொழில்வரி விதிப்பு செய்தல், காலிமனை வரிவிதிப்பு, கட்டட வரைபட அனுமதி, சொத்துவரி விதிப்பு, சொத்துவரி பெயர் மாற்றம், குடிநீர் குழாய் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு, நகர்ப்புற குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம், தாலிக்குத் தங்கம் வழங்குதல் உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் இம் மையங்களில் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இச் சேவை மையம் குறித்து, மேயர் கூறியது: அம்மா சேவை மையங்கள் நான்கு மண்டலங்களிலும் ஒவ்வொரு புதன்கிழமையும் செயல்படும். முதல் நாளில் நான்கு மண்டலங்களிலும் 390 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நகர்ப்புற குடிசை மேம்பாட்டுத் திட்டத்தில் காங்கிரீட் வீடுகள் கட்ட 371 பயனாளிகளுக்கு ரூ.96.7 லட்சம், 32 பேருக்கு பிறப்பு, இறப்புச் சான்று, 42 பேருக்கு கட்டட வரைபட அனுமதி, 20 பேருக்கு சொத்துவரி விதிப்பு, 17 பேருக்கு சொத்துவரி பெயர் மாற்றம், 60 பேருக்கு குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்பு, 7 பேருக்கு வர்த்தக உரிமம் ஆகியவற்றுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயர் கு. திரவியம், மண்டலத் தலைவர்கள் பெ. சாலைமுத்து, கே. ராஜபாண்டியன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

0 comments: