Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by Unknown in ,    

 மதுரை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் நடத்தும் பாராட்டு விழா எனச் சொல்லப்பட்டாலும், முற்றிலும் அதிமுகவினரால் நடத்தப்பட்ட விழாவாக அமைந்தது மதுரையில் வெள்ளிக்கிழமை முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா.ஜெயலலிதா வருகையையொட்டி வைக்கப்பட்ட பேனர்களில் எம்.ஜி.ஆர் படமோ, முல்லை பெரியாறு அணையை உருவாக்கிய பிரிட்டிஷ் பொறியாளர் பென்னிகுக் படமோ பெரிதாக காணப்படவில்லை. யாரும் தங்களுடைய படங்களை பேனர்களில் போடக்கூடாது என முதல்வர் ஜெயலலிதா இட்ட உத்தரவுகள் எதுவும் செல்லுபடியாகவில்லை. விழா முகப்பிலேயே பிளக்ஸ் போர்டு வைத்தவர்கள் பல வகையாக போஸ் கொடுத்தார்கள். வெளியே தான் இப்படியென்றால் விழா மேடையில், ஜெயலலிதா படத்தைத் தவிர யார் படமும் இல்லை. ‘வாழும் பென்னிகுக்கே’ என பலர் வாழ்த்துப்பா பாடியதால் என்னவோ, மேடையில் பென்னிகுக் படம் கூட இடம் பெறவில்லை. தேனி, கம்பம் ஆகிய பகுதிகளில் இருந்து அரசுப் பேருந்துகள் பல மதுரையில் நடைபெறும் விழாவிற்கு இயக்கப்பட்டன.
எத்தனை பேருந்துகள் வெளி மாவட்டங்களில் இருந்து வருகிறது என்ற கணக்கெடுப்பை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் புள்ளி விபரமாக கணக்கெடுத்தனர். ஆனால், அதே வேளையில், சுற்றுச்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் எங்கும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. காலையில் 10 மணிக்கே பொதுக்கூட்டம் நடைபெறும் திடலுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து அதிமுகவினர் ஆட்களை அழைத்து வந்திருந்தனர். மாலை 4.40 மணிக்குத்தான் நிகழ்ச்சி துவங்கியது. இதனால், பல பேருந்துகளில் நிகழ்ச்சிகளில் முழுமையாக கலந்து கொள்ளாமல் ஏராளமானோர் திரும்பிச் சென்றதைக் காண முடிந்தது.முதல்வரை பாராட்டுவதில் யார் விஞ்சுவது என்பதைப் போல, ஒருவர் தேசியத் திருமகள் எனக்கூற,ஒருவர் வேலுநாச்சியார் எனக்கூற, இன்னொருவர் தன் பங்கிற்கு ராணி மங்கம்மாள் என்றார். அமைச்சர் உதயகுமார் பேசுவதற்கு முன்பு தான் இருந்த இருக்கைக்கு முன்பாக இருந்தே முதல்வரைப் பார்த்து, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிட்டார். பேசி முடிந்த பின் மீண்டும் அதே போன்றுசெய்ய அவர் தவறவில்லை.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டங்களில் கலந்து கொண்டு அரசையும், அரசு அதிகாரிகளையும் தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டிருந்த பனையூர் அழகு சேர்வை என்பவர் திடீரென தமிழக விவசாயிகள் சங்க மதுரை மாவட்டச் செயலாளர் என்று அறிவிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டு வாழ்த்துரை வழங்க பணிக்கப்பட்டார். இது நாள் வரை ஒரு நாளும் அவர், விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டங்களில் விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர் என்று அறிவிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.பெரியாறு பாசன விவசாயிகள் சங்க பகிர்மானக்குழுத்தலைவர் என அறிவிக்கப்பட்ட பெரியாறு பாசன விவசாயிகள் திட்டக்குழுவைச் சேர்ந்த அருள்பிரகாசம் வரவேற்புரையிலேயே, திமுக தலைவர் கருணாநிதியை அர்ச்சனை செய்து ஆரம்பித்து வைத்தார்.
அவரைத் தொடர்ந்து வாழ்த்துரைக்கு வந்த பலரும் அவர் பாணியிலேயே தங்கள் பணிகளைச் செவ்வனே செய்தனர்.முதல்வர் ஜெயலலிதா, மூன்று குட்டிக்கதைகளைச் சொன்னார்.வாழ்த்துரை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், செல்லூர் கே. ராஜூ ஆகியோருக்குப் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை. விதிகளை மீறி அதிமுகவினர் விளம்பரப் பேனர்களை வைத்திருப்பதாக திமுக வழக்கறிஞர் தொடுத்த வழக்கில், அனுமதி பெறாத பேனர்கள் அகற்றப்படும் என நீதிபதிகளிடம் அரசுத் தரப்புவழக்கறிஞர் கூறியிருந்தார். ஆனால், பல இடங்களில் மாநகராட்சி அனுமதி பெறாத பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.முல்லைப்பெரியாறு நீருக்காக குரல் கொடுத்த விவசாயிகள், விவசாயிகள் சங்கத்தினர் பலர் விழாவில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குமுறல்கள் அதிமுக தரப்பில் இருந்தே கிளம்பியுள்ளதுபெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.- ப.கவிதா குமார்

0 comments: