Saturday, August 23, 2014

On Saturday, August 23, 2014 by TAMIL NEWS TV in ,    
தந்தை இறப்பு
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே உள்ள கனகபுரம் செலம்பன்பாறை தோட்டத்தில் வசித்து வருபவர் நடராஜ் (வயது 48). இவர் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். நடராஜின் தந்தை குப்புசாமி. இவர் கிராம நிர்வாக அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்த நிலையில் தந்தை குப்புசாமியின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக நடராஜ் வீட்டில் ஏ.டி.எம். கார்டை பார்த்தார். ஆனால் ஏ.டி.எம். கார்டை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் சம்மந்தப்பட்ட வங்கிக்கு சென்று தந்தையின் கணக்குகளை சரி பார்த்தார். அப்போது அதில் கடந்த 3 மாதங்களில் யாரோ ரூ.16,400 பணம் எடுத்து இருந்தது தெரிய வந்தது. இதனால் நடராஜ் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் வெள்ளோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
வாலிபர் கைது
விசாரணையில் நடராஜின் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை பார்த்த திருச்சியைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்கிற சிவா (வயது 26) என்பவர், நடராஜின் தந்தை குப்புசாமியின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சிவாவை தேடி வந்தனர். இந்த நிலையில் சிவா வேலாம்பாளையத்தில் உள்ள ஒரு கயிறு திரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சிவாவை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் குப்புசாமி இறப்பதற்கு முன் அவருடைய வங்கி ஏ.டி.எம். மின் ரகசிய எண்ணை (பாஸ்வேர்ட்) சிவாவிடம் கூறியுள்ளார். குப்புசாமி இறந்த பின்பு வீட்டின் அலமாரியில் இருந்த அவருடைய ஏ.டி.எம். கார்டை திருடி கடந்த 3 மாதங்களாக சிவா பணம் எடுத்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் சிவாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவா பெருந்துறை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

0 comments: