Wednesday, August 20, 2014

On Wednesday, August 20, 2014 by Unknown in ,    




திருப்பூர், : குடிநீர் இணைப்பில் நேரடியாக மின் மோட்டாரை பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் நிரந்தரமாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
திருப்பூர் மாநகர பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில், சிக்கன நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக குடிநீர் விரயமாவதை தடுக்கவும், விதிமீறி குடிநீர் எடுக்கப்படுவதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, குடிநீர் குழாயில் மின் மோட்டார் அமைத்து குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. 
இது குறித்து திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர் மாநகராட்சியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோக திட்டத்தில், வீட்டு குழாய் இணைப்பு பெற்றுள்ளவர்கள் குடிநீர் இணைப்பில் நேரடியாக மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பது சட்ட விரோத செயல் ஆகும். 
இதுகுறித்து கடந்த மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். மேயரும், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து தகவல் தெரிவிக்கும்படி கவுன்சிலர்களுக்கு தெரிவித்திருந்தார். ஆனால் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்ததோடு சரி, சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து தெரிவிக்கவில்லை. ஆகவே மாநகராட்சி ஊழியர்களே குடிநீர் விநியோகம் செய்யும் பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
ஆய்வின் போது, குடிநீர் இணைப்பில் சட்ட விரோதமாக மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பது தெரியவந்தால், நிரந்தரமாக குடிநீர் இணைப்பு துண்டிப்பு, மின் மோட்டார் பறிமுதல் மற்றும் அபராதம் விதித்தல் போன்ற சட்ட பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.

0 comments: