Wednesday, August 13, 2014

On Wednesday, August 13, 2014 by Unknown in ,




இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுபானங்களின் விலை கணிசமான அளவு உயரும் என தமிழ்நாடு மின்சார மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் அறிவித்துள்ள பொழுதில்தான் கோயிலின் காவல் தெய்வமான கருப்பசாமிக்கு மதுபானங்களை வைத்து வழிபட்டிருக்கிறார்கள் தேனி மக்கள்.


தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோயிலுள்ள அருள்மிகு முத்து சோணை கருப்பண சாமிக்கோயிலில் தான் இந்த பூஜைகள் நடந்துள்ளது.

இதுபற்றி நம்மிடையே பேசிய கோவில் பூசாரி கோபிநாத், "ஒவ்வொரு வருசமும் ஆடி மாசம் நாளாவது திங்கட்கிழமை இந்த திருவிழா நடக்கும். பொதுவாக ஒவ்வொரு ஊருக்கும் அய்யனார், வீரபத்திரன்னு காவல் தெய்வங்கள் இருக்கும். சில கோயில்களிலும், இப்படியான காவல் தெய்வங்கள் உண்டு. அதே மாதிரி குச்சனூர் சனீஸ்வர பகவான் சன்னயிதில அவருக்கு காவல்தெய்வமா எங்க கருப்பண சாமி இருக்கிறார். இங்கு இருக்கிற காவல் தெய்வத்துக்கு பக்தர்கள் காணிக்கையாக நிலம், கிடா, சாராய பாட்டில் வச்சுத்தான் வழிபடுவாங்க.


குழந்தைப்பேறு இல்லாதவங்க, திருமணம் கைகூடாதவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளவர்கள், வேலை தேடுபவர்கள், வெளிநாடு செல்ல விரும்புபவர்களுன்னு பக்தர்களின் கஷ்டங்களை குறைய கருப்பணுக்கு வேண்டிய காணிக்கையை செலுத்துவாங்க. திங்கள் கிழமை காலையிலேயே வந்து பாட்டிகளை ஆபீஸ்ல கொடுத்துட்டு போயிடுவாங்க. நாங்க அதை வாங்கி அவுங்களோட பேரை எழுதி வச்சுடுவோம். மதியம் 12.30 க்கு பூஜை ஆரம்பமாகும். நாளு பூசாரிங்க மட்டும்தான் கருவறைக்குள்ள இருப்போம். கருப்பண் முன்னாடி இருக்குற கலயத்துல ஒவ்வொரு பாட்டிலா உடைச்சு உத்துவோம். கருப்பணே அதை குடிக்கிறதா ஒரு ஐதீகம்.


நேரம் ஆகஆக கருப்பணோட கண்ணு குடிகாரங்களுக்கு இருக்குறதுமாதிரி ஆக்ரோஷமா மாறும். இதை வச்சு கருப்பண் குடிச்சுருக்குறதா நாங்க வழிபடுவோம். இந்த பூஜை முடியுறதுக்கு எப்படியும் ராத்திரி ஒன்பது மணியாகிடும். அதுக்குள்ள பக்தர்கள் கொண்டுவந்த கிடா, கோழிகளை வெட்டி சமையல் பண்ணி முடிச்சுடுவாங்க. அந்த உணவை பக்தர்களுக்கு கொடுத்து வழிபடுவோம். ஒவ்வொரு வருசமும் வர காணிக்கையோட (பாட்டிகள்) எண்ணிக்கை அதிகரிச்சுக்கிட்டே தான் போகுது. எனக்கு தெரிஞ்சு இந்த வழிபாடு ஆங்கிலேயர் காலத்துல இருந்தே இருக்கு" என்றார்.