Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by Unknown in ,    
 



திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்து 9 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
திருப்பூர் மாநகராட்சியின் 22வது வார்டு கவுன்சிலராக இருந்த காட்டன் முத்து (அதிமுக) கடந்த ஓராண்டுக்கு முன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
45வது வார்டு கவுன்சிலராக இருந்த மருதமலைசம்பத் (அதிமுக) உடல் நலக்குறைவால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார்.
இதையடுத்து இந்த 2 வார்டுகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறாமல் இருந்தது.
 இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் காலி பதவிகளுக்கான தேர்தல் வருகிற 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து நடந்த வேட்புமனு தாக் கலில், 22வது வார்டில், கலைமகள் கோபால்சாமி (அ.தி.மு.க), குணசேகரன் (பா.ஜ.க), வேலுச்சாமி (மார்க்சிஸ்ட் கம்யூ.,) மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 8 பேர், 45வது வார்டில் கண்ணப்பன் (அ.தி.மு.க), சிவக்குமார் (பா.ஜ.க), நாகராஜன் (இந்திய கம்யூ), சையத் முஸ்தபா (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 15 பேர் என மொத்தம் 23 பேர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர்.
தொடர்ந்து நடந்த வேட்புமனு பரிசீலனையில் 23 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டது.
இந்நிலையில், மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நேற்று மாலையுடன் நிறைவுற்றது. இதில், 22வது வார்டில் 8 பேரில், 4 சுயேட்சை வேட்பாளர்கள் வாபஸ் பெற்றனர். இதே போல் 45வது வார்டில் 15 பேரில் 5 சுயேட்சை வேட்பாளர்கள் வாபஸ் பெற்றனர்.
இதையடுத்து  இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் படி, 22வது வார்டில் கலைமகள் கோபால்சாமி (அ.தி.மு.க), குணசேகரன் (பா.ஜ.க), வேலுச்சாமி (மார்க்சிஸ்ட் கம்யூ.,) சுரேஷ்குமார் (சுயேட்சை) உள்ளிட்ட 4 வேட்பாளர்களும், 45வது வார்டில், கண்ணப்பன் (அ.தி.மு.க), சிவக்குமார் (பா.ஜ.க), நாகராஜன் (இந்திய கம்யூ), சையத் முஸ்தபா (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), மற்றும் சுயேட்சைகள் காஜாஷாஹில் ஹமீத்கான், சித்திக், சையத் முஸ்தபா, மணியன், முகமது கவுஸ், ராஜசேகர் உள்ளிட்ட 10 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

0 comments: