Saturday, September 27, 2014

On Saturday, September 27, 2014 by farook press in ,    
காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் ஆட்டு பட்டியில் புகுந்து ஆடுகளை திருடியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு வேன், மற்றும் ரூ.4¼ லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் அடிக்கடி பட்டிகளில் இருந்து ஆடுகள் திருட்டு போவதாக கடந்த 2 மாத காலமாக புகார் எழுந்த வண்ணம் இருந்தது. காங்கயம் பகுதியில் அழகுகவுண்டன்புதூர் மற்றும் முள்ளிப்புரம் பகுதியில் செலாம்பாளையம் என்ற இடத்திலும் 84 செம்மறி ஆடுகளும், வெள்ளகோவில் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஓலப்பாளையத்தில் 60 ஆடுகளும், என மொத்தம் 144 ஆடுகள் திருட்டு போனதாக வழக்குபதிவு செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார்சிங் உத்தரவின் பேரில், காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.சுருளிராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கே.கே.மகாலிங்கம், செல்வத்தங்கம், சிவக்குமார், சப்–இன்ஸ்பெக்டர்கள் பி.சாஸ்தாஇந்துசேகரன், அப்சல்அகமது, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமை காவலர்கள் பெரியசாமி, மணிமுத்து, மற்றும் போலீசார் ஜெகதீஷ்பிரபு, செந்தில்குமார், கார்த்தி, நீலமேகம், இளைஞர் காவலர் சங்கிலிமுத்து ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, காங்கயம் அருகே பாப்பிணி வீரசோழபுரம் என்ற இடத்தில் சந்தேகப்படும்படியாக ஒரு வாகனத்துடன் நின்றிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆடுகள் திருடப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது இதை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம்,கம்பளியம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் மகேந்திரன் (29) ஈரோடு முத்தம்பாளையம் ரெட்டபாளி வலசு என்ற பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் பிரகாஷ் (22), ஈரோடு ரங்காம்பாளையம் அன்னை சத்யா நகரை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் துரைசாமி (24), அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் பெரியசாமி (23), கணேசன் என்பவரின் மகன் ராகவேல் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில் திருடிய ஆடுகளை விற்பனை செய்துவிட்டதாக கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து ஆடுகளை விற்ற பணம் ரூ.4லட்சத்து 29 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வேனும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர்கள் திருப்பூர் மாவட்டம் மூலனூர் மற்றும் கரூர் மாவட்டம் தென்னிலை போன்ற பகுதிகளிலும் ஆடுகளை திருடியது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 5 பேரும் காங்கயம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த திருட்டு கும்பலின் தலைவனாக மகேந்திரன் செயல்பட்டுள்ளார். இவர் ரெயில்வேயில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். பகல் நேரத்தில் இவர்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று ஆடுகள உள்ள பகுதியை நோட்டம் இடுவது. பின்னர் இரவு நேரத்தில் அந்த ஆடுகள் உள்ள பகுதியில் வேனை நிறுத்தி ஆடுகளை திருடி வேனில் போட்டு சென்று விடுவார்கள். பின்னர் திருடிய ஆடுகளை பழனி பகுதியில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்து விடுவார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

0 comments: