Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
திருப்பூர் அருகே பஸ்–வேன் மோதிய விபத்தில் டிரைவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். பஸ்சில் வந்த 6 பெண்கள் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 50 பேர் நேற்று காலை பஸ்சில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு பின்னர் பல்லடம் திரும்பிக் கொண்டு இருந்தனர். மங்கலத்தை அடுத்த ஆட்டையாம்பாளையம் பிரிவு அருகே இரவு 10 மணி அளவில் பஸ் வந்தபோது எதிரே சென்ற சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சரக்கு வேன் டிரைவரான தர்மபுரியை சேர்ந்த பிரபு(வயது 30) இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். பஸ் டிரைவரான கவுந்தபாடியைச் சேர்ந்த தவசி(32) உடல் நசுங்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தவசி பரிதாபமாக இறந்தார்.
மேலும் பஸ்சில் பயணம் செய்த பனியன் நிறுவன ஊழியர்களான சரத், சிவா, பாண்டுரங்கன், கார்த்திக், தங்கவேலு, ரேணுகா, செல்வி, சுமித்தா, அனிதா மற்றும் பஸ்சின் மற்றொரு டிரைவர் ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் காயம் அடைந்த பனியன் தொழிலாளர்களான ரமேஷ், விஜயலட்சுமி, நித்யா ஆகியோர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தில் சிக்கியவர்களை பல்லடம் தீயணைப்பு வீரர்கள், மங்கலம் போலீசார் போராடி மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பல்லடம்–மங்கலம் ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 comments: