Tuesday, September 16, 2014

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
சேரம்பாடி பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் மூலம் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

காட்டு யானைகள் அட்டகாசம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்-1 பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியில் யானைகள்,சிறுத்தை புலிகள் உட்பட பல விலங்குகள் உள்ளன.

இதில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை தாக்குவதுடன் தொழிலாளர்களையும் தாக்கி வருகின்றன. இதை தடுக்க அந்த பகுதியில் அகழி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் தோட்ட பகுதியில் அகழி அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக காட்டு யானைகள் கூட்டம் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 22 யானைகள் ஊருக்குள் புகுந்தது. இதில் சில யானைகள் தேயிலை தோட்ட பகுதிகளிலும், சில யானைகள் படச்சேரி பகுதிளிலும் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

2 கும்கிகள் வரவழைப்பு

தகவல் அறிந்ததும் காட்டு யானைகளை கும்கி யானைகள் மூலம் விரட்ட முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலர் தேஜ்ஸ்வீ உத்தரவின் பேரில் முதுமலையில் இருந்து சங்கர்,வசீம் ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. பின்னர் கும்கிகள் மூலம் காட்டு யானைகளை தேடும் பணி நடந்தது.

இதை தொடர்ந்து தேயிலை தோட்டப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். இந்த பணியில் சேரம்பாடி ரேஞ்சர் கணேசன், பிதிர்காடு ரேஞ்சர் சோமசுந்தரம் மற்றும் வனத்துறையினரும், வேட்டை தடுப்பு காவலர்களும் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊருக்குள் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை தேடி விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

0 comments: