Tuesday, September 16, 2014

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி தனியார் கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.

தனியார் கல்லூரி

கோத்தகிரியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கோத்தகிரி, குன்னூர், ஊட்டி, கட்டபெட்டு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கல்லூரி முதல்வர் அடிக்கடி மாற்றப்படுவதால் நிர்வாகம் பாதிக்கப்படுவதாகவும், கல்வித்தரமும் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த 11-ந் தேதி கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவ- மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர்.

மீண்டும் போராட்டம்

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தாததால் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் நேற்று கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோத்தகிரி தாசில்தார் ராம்குமார், வருவாய் அதிகாரி கலைச்செல்வி, கிராம நிர்வாக அதிகாரி மகாலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

பின்னர் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் ராம்குமார் மாணவர்களிடம் உறுதி அளித்தார்.

இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments: