Tuesday, September 16, 2014

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 16 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி கட்சி முகவர்கள் முன்னிலையில் நடை பெற்றது.

மின்னணு எந்திரங்கள்

கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 12 லட்சத்து 90 ஆயிரத்து 652 பேர் ஓட்டுப்போட உள்ளனர். மாநகராட்சி தேர்தலுக்காக மொத்தம் 1,226 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதில் 236 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த பகுதிகள் என்று கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளன.

மேயர் தேர்தலுக்கு மொத்தம் 1,380 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன.

சின்னங்கள் பொருத்தும்பணி

இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களிலும் நேற்று நடைபெற்றது. கோவை மாநகராட்சி தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான கணேஷ் தலைமையில் 5 உதவி தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

கோவை ராம்நகர் அரங்கநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டு அவற்றில் 16 வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் அந்தந்த கட்சி முகவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில் பொருத்தும் பணி நடைபெற்றது.

அதன் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு மீண்டும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. முன்னதாக அனைத்து எந்திரங்களும் ஆணையாளர் கணேஷ் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டன. அப்போது உதவி தேர்தல் அதிகாரி ரவி மற்றும் உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

‘சீல்’ வைக்கப்பட்டன

இதேபோல கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தி சீல் வைக்கப்பட்டு மீண்டும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. அந்த அறைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நாளை (புதன்கிழமை) மாலை போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும்.

பொதுமக்கள் ஓட்டு போடுவதற்கு வசதியாக, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு வழங்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இதற்காக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நேற்றுடன் அனைவருக்கும் வாக்காளர் சீட்டு வினியோகிக்கப்பட்டு விட்டது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments: