Saturday, September 27, 2014

On Saturday, September 27, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டத்தில் அடுத்த மூன்று மாதங்களில் 12 கிராமங்களை சேர்ந்த 1,167 பேருக்கு விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் 2014–15–ம் நிதியாண்டுக்கான விலையில்லா வெள்ளாடுகள் வழங்க பயனாளிகளை தேர்வு செய்வது குறித்து கிராம அளவிலான தேர்வுக்குழுவுக்கு நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நாகராஜன் முன்னிலை வகித்தார். முகாமில் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர்கள், ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசும் போது கூறியதாவது:–
13,738 பயனாளிகள்
தமிழக அரசு சார்பில் கிராமப்புறங்களில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 194 கிராமங்களில் 13,738 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் 54 கிராமங்களில் 3,987 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 37 கிராமங்களில் 2,488 பேருக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த 3 மாதங்களில் 12 கிராமங்களில் 1,167 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடக்க உள்ளது. நீங்கள் பயனாளிகளை தேர்வு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் உறவினர்கள் (மனைவி, தாய், தந்தை, மாமனார், மாமியார், மகன், மகள், மருமகள், மருமகன்) மத்திய, மாநில அரசு மற்றும் கூட்டுறவு, அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அங்கம் வகிக்கக்கூடாது.
இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.

0 comments: