Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருப்பூர் பகுதியில் வழிபறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேரை 15.வேலம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
வழிபறி கொள்ளை
திருப்பூரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் பெரியார் காலனி பகுதியில் பிரிண்டிங் பட்டறை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ராஜேஸ் கண்ணாவுடன் பணம் வசூல் செய்வதற்காக 15.வேலம்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சம்பத்குமார் மற்றும் ராஜேஸ் கண்ணா ஆகியோரை வழிமறித்து அரிவாளை காட்டி பணத்தை கொடுக்கும் படி மிரட்டி உள்ளனர். மேலும் சம்பத்குமாரிடம் இருந்த ரூ.500–ஐயும், செல்போனையும் பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓட முயன்ற போது அக்கம்பக்கத்தினர் கொள்ளையர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இது குறித்து உடனடியாக 15.வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
5 பேர் கைது
விசாரணையில் அவர்கள், திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த அரசு என்பவரின் மகன் வினோத்(வயது 23), கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கெவின் பிரமீஸ்(38), போயம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆதிராஜ் (25), பி.என்.ரோடு பகுதியை சேர்ந்த சர்புதீன்(26), வளையங்காடு பகுதியை சேர்ந்த பாலகணேஷ்(26) என்பதும் தெரியவந்தது. இவர்கள் ஏற்கனவே அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மொபைல் மற்றும் கிரிக்கெட் மட்டை திருடிய வழக்கிலும், திருப்பூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது அனுப்பர்பாளையம், வேலம்பாளையம் மற்றும் சென்ரல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதன்பேரில் நேற்று முன்தினம் இவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

0 comments: