Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
அண்ணா பிறந்தநாளையொட்டி நடந்த சைக்கிள் போட்டியில் திருவள்ளுவர் அரசுப்பள்ளி மாணவ–மாணவிகள் பரிசுகளை பெற்றனர்.
அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு சார்பில் முன்னாள் முதல்–அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 106–வது பிறந்தநாளை முன்னிட்டு 2014–2015–ம் ஆண்டிற்கான சைக்கிள் போட்டி 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
போட்டிக்கு அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். சைக்கிள் போட்டியை தொழில் அதிபர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் இராமலிங்கம் வரவேற்று பேசினார். போட்டியில் 13, 15, 17 வயதிற்குட்பட்ட மாணவர்களும், 13, 15, 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் உள்பட 300–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்கள்
இதில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளின் பெயர் வருமாறு:–
15 கிலோமீட்டர் தூரத்திற்கான 13 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் பெரியாயிபாளையம், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சந்தோஷ்குமார் முதல் இடத்தையும், சூரியபிரகாஷ் 2–ம் இடத்தையும், ஜெயக்குமார் 3–ம் இடத்தையும் பிடித்தனர். 20 கிலோ மீட்டர் தூரத்திற்கான 15 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களான ஆகாஷ் முதலிடத்தையும், மணிகண்டன் 2–ம் இடத்தையும், கார்த்திக் 3–ம் இடத்தையும் பெற்றனர். 20 கிலோ மீட்டர் தூரத்திற்கான 17 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் நவீன்குமார் முதல் இடத்தையும், திருப்பூர் சரஸ்வதிகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் நவநீதகிருஷ்ணன் 2–ம் இடத்தையும், திருப்பூர் சின்னச்சாமியம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் கார்த்திகேயன் 3–ம் இடத்தையும் பிடித்தனர்.
மாணவிகள்
10 கிலோமீட்டர் தூரத்திற்கான 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் பெரியாயிபாளையம், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளான சவும்யா, சபீனா, தாரணி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். 15 கிலோமீட்டர் தூரத்திற்கான 15 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகா முதல் இடத்தையும், மைக்ரோகிட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நிதர்ஷினி 2–ம் இடத்தையும், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகா 3–ம் இடத்தையும் பிடித்தனர். 15 கிலோமீட்டர் தூரத்திற்கான 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் பெரியாயிபாளையம், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளான ரம்யா, சாந்தி, பிரியதர்ஷினி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.
பரிசு
இதைதொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் முன்னாள் சேர்மன் கிருஷ்ணன் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசும், முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு தகுதிச்சான்றிதழ்களையும் வழங்கினார். முடிவில் மாவட்ட கூடைப்பந்து பயிற்றுனர் பிரபு நன்றி கூறினார்.

0 comments: