Saturday, September 06, 2014

On Saturday, September 06, 2014 by farook press in ,    
திருப்பூர் அருகே சாயபப்ட்டறையில் தேங்கிய கழிவு நீரால் குடிநீர் மாசுபட்டதால் சாய தொழிற்சாலைக்கு கலெக்டர் சீல் வைக்க உத்திரவிட்டார்.
திருப்பூர் வீரபாண்டி அருகே புதுத்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சாயபட்டறை இயங்கி வருகிறது. அங்கு ஒரே வளாகத்தில் சாய தொழிற்சாலை மற்றும் ரோட்டரி பிரிண்டிங் நிறுவனம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இதில் சாய தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீரபாண்டி பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் ரோட்டரி பிரிண்டிங் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் மட்டும் அந்த நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள 2 சோலார் தளத்திற்கு அனுப்பப்படுகிறது. பின்னர் அந்த நீர் ஆவியாக்கப்பட்டு, கழிவுகள் அகற்றப்படுகிறது.
இந்த நிலையில் அந்த ரோட்டரி பிரிண்டிங் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் சோலார் தளம் மட்டுமின்றி அந்த நிறுவனத்தில் உள்ள ஒரு பெரிய குழியில் தேங்கி இருந்துள்ளது. அங்கு நீண்ட நாட்களாக சாயம் கலந்த இந்த கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் குடிநீரும் மாசுபட்டு, நிறம் மாறி இருக்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்களும், விவசாயிகளும் அந்த சாய தொழிற்சாலையை திடீரென முற்றுகையிட்டனர். மேலும் இந்த கழிவுநீர் தேக்கத்தால் அந்த பகுதியை சுற்றி உள்ள மீனாம்பாறை, அவரப்பாளையம், ஏரித்தோட்டம், நொச்சிபாளையம் பகுதிலியில் உள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து தகவல்;அறிந்த மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்திரவின் பேரில், வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் நிகார் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதை தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் திருப்பூர் மாவட்ட வடக்கு உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் தலைமையில் அதிகாரிகள் சம்பந்தபட்ட ரோட்டரி பிரிண்டிங் நிறுவனத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் அந்த நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள பெரிய குழியில் ரோட்டரி பிரிண்டிங் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறைகேடாக  தேங்கி இருந்தது தெரிய வந்தது.இதை தொடர்ந்து அவர் ரோட்டரி பிரிண்டிங் நிறுவனத்தில் இருந்த பிரிண்டிங் எந்திரத்தில் 3 இடங்களில் சீல் வைத்தார். உடனடியாக அந்த கழிவுநீரை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றி பின்னர் அங்குள்ள கழிவுகளை அப்புறப்படுத்தி, உடனே அந்த குழியை மூட நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.


0 comments: