Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
சென்னை, செப். 13–
தென் இந்திய தொலைக் காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழர் எழுச்சி இயக்க பொதுச் செயலாளர் வேலு மணி தலைமை தாங்கினார். தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவர் கே.ராஜன், நாம் தமிழர் கட்சி துணைத் தலைவர் கலைக்கோட்டுதயம், ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தென் இந்திய தொலைக் காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தமிழில் பேசக்கூடாது, தமிழில் மாத இதழை வெளியிட முடியாது என்று அறிவித்துள்ள சங்க தலைவர் நாக்பாலை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் போது திருமாவளவன் கூறியதாவது:–
தென் இந்திய தொலைக் காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தமிழர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களாக உள்ளனர். பிறமாநிலத்தினர் ஒருசிலர்தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த சங்கத்தின் செயல்பாடு முழுவதும் தமிழை புறக்கணிப்பதாக உள்ளது. இது தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும் எதிரானது. இந்த போக்கை சங்க தலைவர் உடனே கைவிட வேண்டும்.
சீமான் கூறியதாவது:–
இந்த சங்கத்தில் ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமிழிலும் மாத இதழை வெளியிட வேண்டும். தமிழில் பேச அனுமதிக்க வேண்டும். சங்க நடவடிக்கைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த சங்க நிர்வாகிகள் ஜாக்குவார் தங்கம், கலைக்கோட்டுதயம், ஆதிராம் ஆகியோரை சங்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். உறுப்பினர்கள் யாரிடமும் கேட்காமல் தன்னிச்சையாக சங்க தலைவர் நாக்பால் முடிவு எடுத்துள்ளார். இந்த நிலை நீடித்தால் தமிழ்நாடு தொலைக்காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்கும் நிலை வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் வஞ்சை அரசன், பாவரசு, பாலசிங்கம், வன்னியரசு, மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், பார்வேந்தன், ஆதிராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: