Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
திராவிடக்கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவுகளின் படி தலா 4 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டு, நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாலும், இப்படி தண்டனை பெற்றதால் அவர்கள் வகிக்கும் பதவிகள் உடனடியாக இழப்புக்கு உள்ளாகும். இது தண்டனைக் காலத்திற்கு பிறகும் 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்கத் தடை என்று உச்சநீதிமன்றம் 2013ல் வழங்கிய தீர்ப்பின் காரணமாக ஏற்பட்ட சட்டப்படியான விளைவு ஆகும்.
இதற்கு முன் நாடாளு மன்றத்தில் பதவிகளில் இருந்த நான்கு பேர்கள் லாலுபிரசாத் உட்பட இத்தீர்ப்பின் அடிப்படையில் பதவி இழப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதற்கு முன்பு 2013க்கு முன்பு இருந்த நிலை வேறு. முதல் அமைச்சர் பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படி தண்டனை பெற்று உடனடி பதவி இழப்புக்கு ஆளாவது இதுவே இச்சட்டத்தின் கீழ் முதல் நிகழ்வு இந்திய அரசியலில்.
அ.தி.மு.க. போதிய பெரும்பான்மையும், கட்டுக் கோப்புடனும் உள்ள ஆளுங்கட்சியாக இருக்கிற காரணத்தாலும் அ.தி.மு.க.வின் ஆற்றல், அதிகாரம் மிக்க தலைவராக பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் ஜெயலலிதா இருக்கின்ற காரணத்தாலும் அவரது ஆணைப்படி நேற்று அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை சட்டமன்ற கட்சித் தலைவராக ஒரு மனதாகத் தேர்வு செய்துள்ளனர். அவர் தலைமையில் புதிய அமைச்சரவை செயல்படும் என்பதற்கு தமிழக ஆளூநர் ரோசய்யாவை சந்தித்து, அவரும் சட்டப்படி அழைப்பு விடுத்து, இன்று அமைச்சர்கள் பதவியேற்று, அரசியல் சட்டப்படி கடமையாற்ற விருக்கின்றனர்.
அமைதியும், அடக்கமும் நிறைந்தவர் ஓ.பன்னீர் செல்வம், அவர் ஏற்கனவே ஒரு முறை இப்பதவியில் அமர்ந்தப்பட்டும் உள்ளார். அவரது தொடர் விசுவாசத்திற்கு அத்தலைமை தந்த அங்கீகாரப் பரிசு இது. ஜனநாயகத்தில் ஏதுவும் நிரந்தரமோ, மாறாததோ அல்ல.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவர் மீண்டும் இரண்டாவது முறையாக அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வர் ஆவது சமூக நீதிக் கண்ணோட்டத்தில் பெரிதும் வரவேற்கத்தக்கது. அவரது தலைமையில் அமைந்து புதிய அரசு அனைத்து மக்கள் நலத்திலும் அக்கறை காட்டி, எதிர்க்கட்சிகளையும் மதித்து தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி, நீதியான ஆட்சி என்ற பெயரை எடுத்து வரலாறு படைக்க வாழ்த்துகிறோம்.
இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

0 comments: