Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த நிச்சாம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 45). அவருடைய மனைவி பழனியம்மாள் (38). இவர்களுக்கு கார்த்தி (23), தங்கராசு (21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் கார்த்தி திருப்பூர் பனியன் நிறுவனத்தில்வேலை செய்து வருகிறார். தங்கராசு பாலிடெக்னிக்கில் படித்து வேலை தேடி வந்தார். நேற்று காலை துணி துவைப்பதற்காக கருப்பசாமி, பழனியம்மாள் மொபட்டிலும், தங்கராசு சைக்கிளிலும் கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றனர். பழனியம்மாளை மொபட்டில் இருந்து கீழே இறக்கிய கருப்புசாமி, சோப்பு வாங்க கடைக்கு சென்றார்.அப்போது தங்கராசு துணி துவைப்பதற்காக வாய்க்காலின் கரையில் இறங்கினார். எதிர்பாராதவிதமாக அவர் கால் இடறி வாய்க்காலுக்குள் விழுந்துவிட்டார். கரையில் நின்றுகொண்டு இருந்த தாய் பழனியம்மாள் மகனை காப்பாற்றுவதற்காக வாய்க்காலில் குதித்தார். அப்போது அவரும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார்.கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த கருப்பசாமி மனைவியும், மகனும் வாய்க்காலில் இழுத்து செல்லப்பட்டு இருப்பதை பார்த்து பதறிப்போய் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் கிடைத்ததும் பெருந்துறை தீயணைப்பு நிலைய அதிகாரி பொன்னாமலை தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீர் இழுத்து செல்லப்பட்ட தங்கராசுவையும், பழனியம்மாளையும் தேடினார்கள். அப்போது வாய்க்காலில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் தங்கராசுவின் உடலை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பழனியம்மாளின் கதி என்ன? என்பது தெரியவில்லை. மீனவர்கள் உதவியுடன் பழனியம்மாளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

0 comments: