Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
பெருந்துறை அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில், ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

தீ விபத்து

பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் மலைக்கோவில் எதிரில் வசித்து வருபவர் சண்முகம் (வயது 55). அவருடைய மனைவி அங்குலட்சுமி. சண்முகம் திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் இருக்கை, டேபிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாடகைக்கு விட்டு வருகிறார். இவைகளை தனது வீட்டையொட்டி உள்ள ஒரு அறையில் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.15 மணி அளவில் சண்முகமும், அங்குலட்சுமியும் தூங்க சென்றுவிட்டனர். 11.30 மணி அளவில் அறை முன்பு போடப்பட்டு இருந்த ஓலைக்கீற்றுகளில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைப்பார்த்த 2 பேரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். இந்த தீ மளமளவென அருகில் உள்ள வீட்டுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

ரூ.15 லட்சம் சேதம்

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு நிலைய அதிகாரி பொன்னாமலை தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீடு முன்பு சங்கிலியால் கட்டப்பட்டு இருந்த நாய் கருகி செத்தது. மேலும் பொருட்கள் வைத்திருக்கும் அறை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாடகை வேன், டேபிள், சேர் மற்றும் வீட்டில் இருந்த டிவி, மிக்சி, கிரைண்டர், ரூ.1 லட்சம் ஆகியவை தீயில் எரிந்து சேதமானது. இதன் சேத மதிப்பு ரூ.15 லட்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து சண்முகம் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தீ விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை தாசில்தார் ஜெகநாதன், சீனாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறினர். 

0 comments: