Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by Unknown   




இந்தியாவில் விடுதலைப்புலிகளின் தடையை நீடிப்பது குறித்த விசாரணையில் பங்குகொள்ள வைகோவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இரண்டாண்டுக்கு ஒருமுறை இந்த தடை நீடிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த மே மாதம் மட்டும் விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் தடையை நீக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட தீர்ப்பாய விசாரணையில் தன்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

வைகோவின் மனு மீதான விசாரணை டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின் போது வைகோ கூறியதாவது: "''நான் விடுதலைப்புலிகளின் முழு ஆதரவாளன். இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, இந்தியாவில் ஆதரவாளர்களும், அனுதாபிகளும் இருக்கின்றார்கள் என்று தடை ஆணை கூறுகிறது. நான் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசினேன் என்பதற்காக, பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 19 மாதம் சிறையில் இருந்திருக்கிறேன். இன்னமும் அந்த வழக்கு முடியவில்லை. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது.

2010 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளை நான் ஆதரித்துப் பேசினேன் என்பதற்காக, இதே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 13 ஆம் பிரிவின் கீழ், என் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.  

2010 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தீர்ப்பாய நீதிபதி, விக்ரம்ஜித் சென் தனது இறுதித் தீர்ப்பில், ‘மறுமலர்ச்சி தி.மு.க. விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கம்’ என்று குறிப்பிட்டு இருந்தார். நான் அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கின்றேன். எனவே என்னை இந்தத் தீர்ப்பாய விசாரணையில் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இலங்கைத் தீவில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்கள் அங்கு வாழ முடியாமல் உலகின் பல நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் செல்லுகிறார்கள். ஏழரைக் கோடித் தமிழர்கள் வாழ்கின்ற தமிழ்நாட்டுக்கு அதுபோல வருகின்ற ஈழத்தமிழர்கள் பலரை, அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை பொய் வழக்குப் போட்டுச் சிறையில் அடைக்கிறது. அதனால், தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது. எனவே, இந்த விசாரணையில் என் தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி வேண்டும்.

2010 ஆம் ஆண்டு தீர்ப்பாய விசாரணையிலும் நான் இதுபோன்ற மனு தாக்கல் செய்தேன். என்னை ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், விசாரணை அமர்வுகளில் பங்கு ஏற்கவும், என் வாதங்களை முன்வைக்கவும் தீர்ப்பாய நீதிபதி அனுமதித்தார். மீண்டும் 2012 ஆம் ஆண்டில், தீர்ப்பாய நீதிபதி ஜெயின் முன்பு, அதுபோன்ற மனுவைத் தாக்கல் செய்தேன். அவரும், முன்னைய தீர்ப்பாயம் அனுமதித்ததைப் போல எனக்கு அனுமதி தந்தார்.

எனவே, என்னை இந்த அமர்வில் ஒரு தரப்பாகச் சேர்க்க வேண்டுகிறேன். அதற்கு வாய்ப்பு இல்லையேல், விசாரணையில் பங்கு ஏற்று என் வாதங்களை முன்வைப்பதற்கு அனுமதிக்க வேண்டுகிறேன்" என்று வாதாடினார்.

வைகோவின் வாதத்திற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின், வைகோ நல்ல் நோக்கத்தோடு இந்த விசாரணையில் பங்குகொள்ள விரும்பினாலும், அவர் புலிகள் அமைப்பின் உறுப்பினராகவோ, பொறுப்பிலோ இல்லாததால் அவரை இந்த விசாரணையில் அனுமதிக்ககூடாது என்றும் கூறியதோடு வேண்டுமானால் கடந்த தீர்ப்பாயங்களில் எவ்வகையான அனுமதி கொடுக்கப்பட்டதோ அதுபோன்ற அனுமதி கொடுக்கலாம்’ என்று கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம்கோர்ட் நீதிபதி, "‘வைகோவை ஒரு தரப்பாக இந்த விசாரணையில் சேர்க்க முடியாது. ஆனாலும், அவர் இந்த அமர்வு விசாரணையில் பங்கு ஏற்கவும், வாதங்களை முன்வைக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. புலிகள் தடை மீதான தீர்ப்பாய விசாரணை செப்டம்பர் 26, 27 தேதிகளில் சென்னையில் நடைபெறும்’ என்று அறிவித்தார்.

0 comments: