Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in    
திருவட்டார் அருகே மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.

தெருவிளக்கு எரியவில்லை

திருவட்டாரை அடுத்துள்ள வேர்கிளம்பி பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 18-வது வார்டுகளில் கல்லறவிளை, செக்காளவிளை, கொட்டாரவிளை, கொச்சன்குளம் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள தெரு விளக்குகள் சுமார் 3 மாதங்களாக எரியவில்லை என்று அந்த பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர். மேலும், தெருவிளக்குகளை உடனே சரிசெய்யக்கோரி பேரூராட்சி நிர்வாகம், கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும், புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

நூதன போராட்டம்

இந்த நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.நேற்று முன்தினம் இரவு தெருவில் திரண்ட அந்த பகுதி மக்கள் அங்குள்ள மின் கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றி வைத்தனர். மேலும், தங்கள் கைகளில் தீப்பந்தம் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி கோரிக்கையை வற்புறுத்தி கோஷம் எழுப்பினர்.

இது பற்றி அந்த பகுதி மக்கள் கூறும்போது,“ தெரு விளக்குகள் எரியாததால் இரவில் பெண்கள் நடமாட அஞ்சும் நிலை உள்ளது. மேலும், நகை பறிப்பு உள்பட குற்றச்செயல்களும் நடைபெறுவதால் உடனடியாக தெருவிளக்குகளை எரியவைக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டங்கள் நடத்தப்படும்“ என்று தெரிவித்தனர். 

0 comments: