Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
கோவை–மதுரை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது குண்டடம். குண்டடத்தில் இருந்து சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த சுமார் 50–க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பஸ் ஏறி வெளியூருக்கு சென்று வருகின்றனர். ஆனால் இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் மழை, வெயில் காலங்களில் இங்கு காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். எனவே குண்டடத்தில் பயணிகளின் வசதிக்காக ஒரு பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் குண்டடத்தை சேர்ந்த திருநந்தி சித்தா மருத்துவ அறக்கட்டளை மருத்துவர் செல்வக்குமார் நிழற்குடை அமைக்கவும், பஸ் நிறுத்தம் அருகே உள்ள 4 ரோடு சந்திப்பை அழகுபடுத்தி பூங்கா அமைக்கவும் முன்வந்துள்ளார். அதற்காக அவர் ரூ.5 லட்சம் நிதியை ருத்ராவதி பேரூராட்சி நிர்வாகத்திடம் வழங்கி உள்ளார். அதை தொடர்ந்து பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் ருத்ராவதி பேரூராட்சி தலைவர் மோகன்ராஜ், துணைத்தலைவர் சீனிவாசன், திருநந்தி சித்தா மருத்துவ அறக்கட்டளை மருத்துவர் செல்வக்குமார், கவுன்சிலர்கள் நந்தகுமார், வேல்ராமன், அ.தி.மு.க குண்டடம் நகர செயலாளர் தமிழரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: