Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
தாராபுரம்– ஒட்டன்சத்திரம் சாலை மோட்டல் அருகே காட்டுக்குள் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்த பெண் கோவை வடவள்ளியை சேர்ந்த காவலாளி மனைவி செல்லம்மாள் என அடையாளம் தெரிந்தது.
பெண் பிணம்
தாராபுரம்–ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள ஒரு மோட்டல் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள ஒரு புதரில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசிற்கு தகவல் வந்தது. அதன் பேரில் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் சரியாக அடையாளம் காண முடியவில்லை.
போலீசார் விசாரணை
இதையடுத்து போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் கோவையில் புதைக்கப்பட்டது. மேலும் அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதை ஆய்வு செய்ய அவருடைய உடல் உறுப்புகள் சென்னையில் உள்ள ரசாயன பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
தனிப்படை
முதலில் அந்த பெண் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக சப்–இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் ஏட்டு முகமது ரபி, சர்க்கிள் ஏட்டு சிவக்குமார், பிரபாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். பிணமாக கிடந்த பெண் உடல் அருகே பையில் இருந்து கைப்பற்றப்பட்ட பஸ் டிக்கெட்டை வைத்து அவர் கோவை சிங்காநல்லூரில் இருந்து பஸ் ஏறி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தும் அடையாளம் காணமுடியில்லை. எனவே கோவை மாநகர் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பெண் காணாமல் போனதாக புகார் ஆகி உள்ளதா? எனவும் விசாரித்தனர். ஆனால் புகார் எதுவும் வராததால் போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.
அடையாளம் தெரிந்தது
இதற்கிடையில் கோவை வடவள்ளி போலீஸ் நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வடவள்ளியை சேர்ந்த காவலாளி அழகர் (50) என்பவர் மணப்பாறை சென்ற தனது மனைவி செல்லம்மாளை (45) காணவில்லை என்றும், கண்டு பிடித்து தருமாறு புகார் கொடுத்தார். இது பற்றிய தகவல் தாராபுரம் போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனே தனிப்படை போலீசார் ஏற்கனவே அந்த பெண் உடல் அருகே கைப்பற்றப்பட்ட பொருட்களை அழகரிடம், காட்டினார்கள். மேலும் அந்த பெண் உடலில் இருந்த மச்சங்களையும் எடுத்து கூறினார்கள். இதையடுத்து மோட்டல் அருகே இறந்து கிடந்த பெண் தனது மனைவி செல்லம்மாள் என்று அழகர் அடையாளம் காட்டினார். இதனால் மோட்டல் அருகே இறந்து கிடந்த பெண் ஒரு மாதத்திற்கு பிறகு அடையாளம் காணப்பட்டுள்ளது.

0 comments: