Thursday, September 08, 2016

On Thursday, September 08, 2016 by Unknown in    


சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பணியாற்றுவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

திடீர் விருப்ப ஓய்வு

தமிழக காவல்துறையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கிய அதிரடி மாற்றங்கள் நேற்றும் நீடித்தது.

நேற்று முன்தினம் நள்ளிரவு தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றிய அசோக்குமார் திடீரென்று விருப்ப ஓய்வில் சென்றார். இந்த மாற்றம் நேற்று முன்தினம் நள்ளிரவில் தமிழக காவல்துறையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

தமிழக காவல்துறையின் புதிய சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யார்? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்து நின்றது.

டி.கே.ராஜேந்திரன்

அந்த பதவிக்கு அனைவரும் எதிர்பார்த்தபடி சென்னை நகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய டி.கே.ராஜேந்திரன் அந்த பொறுப்புக்கு நேற்று பகலில் நியமிக்கப்பட்டார்.

அவர் தமிழக உளவுத்துறையின் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. முழு பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனிப்பார் என்றும் நேற்று அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொறுப்பு ஏற்றார்

தலைமை செயலாளர் ராமமோகனராவ் இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார். இந்த உத்தரவு வந்த உடன் டி.கே.ராஜேந்திரன் தமிழக காவல்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு விரைந்து வந்தார்.

தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. பொறுப்பையும், உளவுப்பிரிவு டி.ஜி.பி.யாகவும் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்ற உடன் அவருக்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.க்கள் திரிபாதி, சஞ்சை அரோரா, உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு

பதவிஏற்ற உடன் டி.கே.ராஜேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக மக்களுக்கு பணியாற்றுவதற்காக இந்த நல்ல வாய்ப்பை கொடுத்துள்ள தமிழக முதல்-அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும், எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த பொறுப்பை செவ்வன நிறைவேற்ற பாடுபடுவேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து எனது பணிகள் இருக்கும். அனைவரும் இந்த சிறப்பான பணியை செய்வதற்கு எனக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேடி வந்த பதவி

தமிழக காவல்துறையின் புதிய டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நேர்மையான சிறந்த பண்பாளர் என்று அனைவராலும் போற்றப்படுபவராவார். அவரது நற்பண்புகளுக்காக இந்த உயர்ந்த பதவி அவரைத் தேடிவந்துள்ளது என்று தமிழக காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. அவர் ஏற்கனவே தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டம்

டி.கே.ராஜேந்திரனின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், ஓலைப்பாடி கிராமம் ஆகும். ஆரம்ப கல்வியை கிராமத்தில் உள்ள அரசு பஞ்சாயத்து பள்ளியில் பயின்றார். இளங்கலை பட்டப்படிப்பை வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊரீஸ் கல்லூரியிலும், முதுகலை பட்டப்படிப்பை சென்னை பல்கலைக்கழகத்திலும் முடித்தார். அங்கு அவர் பாதுகாப்பு சம்பந்தமான படிப்பையும் பயின்றார்.

1984-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வு பெற்று தமிழக போலீஸ் துறையில் அவர் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் போலீஸ் துறையில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தார்.

கோவை மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும், திருச்சி, தஞ்சாவூர், விருதுநகர் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாகவும் இருந்துள்ளார். தமிழக உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

0 comments: