Thursday, September 08, 2016

On Thursday, September 08, 2016 by Unknown in    

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லைக்கு இன்று வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைசூரு,

தமிழ்நாட்டில் காவிரி பாசன பகுதியில் சம்பா சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.தமிழக அரசு இடைக்கால மனு

அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 90 அடி இருந்தால் மட்டுமே அந்த தேதியில் தண்ணீர் திறக்கப்படும். இல்லையேல் தண்ணீர் திறப்பது தாமதப்படும்.

இந்த ஆண்டில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருந்ததால் சம்பா சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.

எனவே சம்பா சாகுபடிக்காக காவிரியில் உடனடியாக 50 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, உடனடி நிவாரணமாக தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் (12.96 டி.எம்.சி.) திறந்து விடுமாறு கடந்த திங்கட்கிழமை கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால் இதற்கு கர்நாடகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று கோரி மண்டியா, மத்தூர், பெங்களூரு நகரங்களிலும், அங்குள்ள காவிரி பாசன பகுதிகளிலும் விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.காவிரியில் தண்ணீர் திறப்பு

இந்த நிலையில், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று முன்தினம் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கில் கர்நாடகத்தின் சார்பில் ஆஜராகும் வக்கீல்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்ற தவறினால் சட்ட சிக்கல்கள் ஏற்படும் என்பதால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு 12.05 மணி முதல் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி வீதமும், மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டது. அதாவது இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டு இருக்கிறது. அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு இரு மாநில எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவை வந்து சேரும் போது சற்று குறைந்துவிடும் வாய்ப்பு உள்ளதால், ஆயிரம் கனஅடி நீர் கூடுதலாக திறந்து விடப்பட்டு உள்ளது.இன்று வந்து சேரும்

இந்த தண்ணீர் இன்று (வியாழக்கிழமை) காலை பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வந்து சேரும் என்றும், அதன்பிறகு இரவுக்குள் மேட்டூர் அணையை வந்து அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 3,300 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 76 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3,079 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,250 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து கர்நாடகம் தற்போது திறந்து விட்டுள்ள தண்ணீர் மேட்டூர் அணையை வந்து அடையும் போது நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு அடி வீதம் நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கிறிஸ்தவ கோவில் கோபுரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையும் போதெல்லாம் அணையின் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடியில் உள்ள கிறிஸ்தவ கோவில் கோபுரம் முதலில் வெளியே தெரியும். பின்னர் அணையின் நீர்மட்டம் 68 அடியாக குறையும் போது நந்திசிலை, ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம் ஆகியவை வெளியே தெரியும்.

இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து, புராதன நினைவுச்சின்னங்கள் வெளியே தெரிந்தன. இவற்றை காண தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பண்ணவாடிக்கு வந்து சென்றனர்.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினாலும், கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீராலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. இதனால் பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் வெளியே தெரிந்த நந்தி சிலை கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீரில் மூழ்கியது.

தற்போது அணையின் நீர்மட்டம் 76 அடியாக உயர்ந்துள்ளதால் பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் உள்ள கிறிஸ்தவ கோவில் கோபுரமும் தண்ணீரில் மூழ்க தொடங்கி இருக்கிறது

0 comments: